கொள் குறி வகை வினா அடிப்படையில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு மூலம் தெரிவு செய்யப்படும் பணியாளர்களின் பணித் திறன் சிறப்பாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாயணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், வரைவாளர், கள அளவையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளுக்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். குரூப் 4 தேர்வை பொருத்தவரை, கடந்த 20 ஆண்டுகளாக கொள் குறி வகை (அப்ஜெக்டிவ் டைப்) வினா அடிப்படையிலேயே பணியாளர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
200 வினாக்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேரும் பெரும்பாலானோர், அலுவலகத்திற்கு வரும் கடிதத்தை படித்து புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக பல்வேறு துறை அலுவலகங்களிலும் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. மேலும், அலுவலக குறிப்புகள் மற்றும் வரைவுகளை பிழையின்றி எழுத முடியாமலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் திணறுவதாகவும் கூறப்படுகிறது.
20 ஆண்டு கால மாற்றம்:
இந்த குறைபாடுகளுக்கு, கொள் குறி வினா அடிப்படையில் மட்டுமே பணியாளர்களை தேர்வதே காரணமாக குறிப்பிடப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குரூப் 4 தேர்வு என்பது 200 பொது அறிவு வினாக்கள் கொண்ட கொள் குறி வகை வினாக்களுடன் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டும், அதிலிருந்து 1:10 என்ற அடிப்படையில் முதன்மை தேர்வுக்கு(மெயின் தேர்வு) விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டும் வந்தது. முதன்மை தேர்வு என்பதும் பொது அறிவு தேர்வில் சுருக்கமாக மற்றும் விரிவாக(டெஸ்க்ரிப்டிவ்) விடை அளித்தல், பொது ஆங்கிலம் தேர்வில் கட்டுரை, கடிதம், சுருக்கி எழுதுதல், பத்தியை படித்து விடை அளித்தல், ஆங்கில இலக்கணம் என 2 தாள்களாக நடத்தப்பட்டன. இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே, விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் அலுவலக பணியின்போது, அலுவலக வரைவுகள் மற்றும் கடிதங்களை எழுதுவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களும் திறன் பெற்றிருந்தனர்.
இந்த நடைமுறை கடந்த 20 ஆண்டுகளாக மாற்றப்பட்டதை அடுத்து, தேர்வு செய்யப்படும் பணியாளர்களின் திறனும் கேள்விக்குறியாகியுள்ளது.
மின்வாரிய அலுவலர் ஜோசப் கூறுகையில், குரூப் 4 தேர்வு மூலம் பணி வாய்ப்பு பெறும் பெரும்பாலான இளைஞர்கள், முழு தகுதியோடு பணிக்கு சேர்ந்துவிட்டதாகவே கருதுகின்றனர். அந்த வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. கொள் குறி வினா தேர்வு முறையில் சமச்சீர் பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படுவதால், மனனம் செய்து தேர்வு பெற்று விடுகின்றனர். இந்த தேர்வு முறை விண்ணப்பதாரரின் சிந்தனை திறனை தூண்டுவதாக இல்லை என்பதோடு, அவர்களின் செயல்படு திறன் கண்டறிய முடியாமலும் போய்விடுகிறது.
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தைப் போன்று, எதிர்மறை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். ஆங்கிலம் மட்டுமின்றி தமிழில் கூட பிழையின்றி எழுத தெரியாத பலர் இன்றைக்கு அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்றார். இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை குரூப் 2 தேர்வும், 200 மதிப்பெண் கொண்ட கொள் குறி வினாக்கள் அடிப்படையிலே நடத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் திறன் மிக்க பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அலுவலக பணிகள் தரமிக்கதாக அமையவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, கொள் குறி வகையிலான முதல் நிலை தேர்வு மற்றும் விரிவாக விடையளிக்கும் முதன்மை தேர்வு என மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இதேபோல், மத்திய பணியாளர் தேர்வாணையம்(ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) 10ஆம் வகுப்பு கல்வி தகுதி தரத்தில் நடத்தும் பல்நோக்கு பணியாளர்கள்(மல்டி டாஸ்க் அசிஸ்டன்ட்) பணியிடத்திற்கு 50 மதிப்பெண்களுக்காக நடத்தப்படும் முதன்மை தேர்வில் கட்டுரை மற்றும் கடிதம் வரைதலை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் தகுதி நிலை தட்டச்சு தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்கு பின்னரே, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, திறமையான பணியாளர்களை தேர்வு செய்யும் வகையில் குரூப் 4 தேர்வு நடைமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..