விஜயதசமியான வரும் 8-ம் தேதி அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை திறந்துவைத்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

விஜயதசமி அன்று புதிய செயலில் ஈடுபடத் தொடங்கினால் அது வெற்றியை தரும் என்பது பெரும்பாலோரின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி, அன்றைய தினம் பள்ளிகளிலும், கோயில்களிலும் தட்டில் நெல்பரப்பி வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை.

அதன்படி விஜயதசமி நாளான வரும் செவ்வாய்கிழமை அன்று அங்கன்வாடி மையங்களையும், அரசுத் தொடக்கப்பள்ளிகளையும் திறந்து வைத்து 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை கே.ஜி.வகுப்புகளில் சேர்க்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


மேலும், பள்ளி அமைந்துள்ள சுற்றுப்புறத்தில் பெற்றோர்களை சந்தித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எடுத்துக்கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களும் விஜயதசமி அன்று திறந்திருக்கும் என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு தொடக்கப்பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் சேர்க்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கல்வியை அறிவியல் ரீதியாக அணுக வேண்டிய கல்வித்துறை அதிகாரிகள் இதுபோன்ற மதவிவகாரங்களை கொண்டு அணுகுவது ஏற்கத்தக்கதல்ல என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்


Join Telegram Group Link -Click Here