உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்ற தகவலை பொதுமக்கள் இணைதளம் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள வெளியிடப்பட்டன. இதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம், அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குதல், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் பிறபித்தது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அதன்படி மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரால் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இந்நிலையில் பொதுமக்கள் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் என்ற தகவலை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். எனவே பொதுமக்கள் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது தொடர்புடைய இணையதளம் மூலமகவோ விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

எப்படி பார்ப்பது?:

* வாக்குச்சாவடியை பற்றிய தகவலை அறியை http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php    என்ற இணையதளத்திற்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
* வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய http://www.tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download.php என்ற இணையதளத்திற்கு சென்று மாவட்டம், உள்ளாட்சி அமைப்பின் வகை, வார்டு எண் உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும்.

Join Telegram Group Link -Click Here