முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 3,833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு கடிதம் இ-மெயில், எஸ்எம்எஸ் மூலமாக தேர்வான பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களின் கல்வித்தகுதி தொடர்பான முக்கிய ஆவணங்களை அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதிக்குள் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையத்துக்கு காலை 10 மணிக்குள் தேர்வர்கள் வர வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.


Join Telegram Group Link -Click Here