சென்னை: 2020ம் ஆண்டு பிறக்க உள்ளது. புது வருடத்தில் நாம் புதிது புதிதாக ஏதோ ஏதோ திட்டம் வைத்திருப்போம்.. பெரும்பாலும் அதை பொங்கலுக்கு முன்பே மறந்தும் விடுவோம். இது வாடிக்கை.

ஆனால், வருடம் முழுவதும் மாற்றக்கூடாத, ஒரு விஷயம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அப்படி என்ன என்றுதான் கேளுங்களேன்..

இதுதான் மேட்டர். இந்த வருடம் ஜனவரி 27-ஆம் தேதி என்பதை நாம் எவ்வாறு எழுதியிருப்போம்? 27/1/19 என்றுதானே. அதாவது சுருக்கமாக 2019 என்பதைத்தான் 19 என்று குறிப்பிடுவோம்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு, இவ்வாறு சுருக்கமாக எழுதுகிறேன் என்று 20 என்று ஆண்டை குறிப்பிடும் வகையில் எழுதி விடாதீர்கள்

இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

ஆவணங்கள் ஏதாவதில், நாம் இவ்வாறு குறிப்பிடும்போது, அதன் பின் பகுதியில், 19 அல்லது 18 என யார் வேண்டுமானாலும் எண்களை மாற்றி போட்டுக்கொள்ளலாம். அப்படியானால் 2019ஆம் ஆண்டு அல்லது 2018 ஆம் ஆண்டு என்று பொருள் வந்துவிடும்.

19 என்று போட்டாலும் கூடத்தான், அதன் பின்பகுதியில், 99 என்று எழுதி 1999 என மாற்றி விடலாம் என்று நீங்கள் கூறலாம். ஒருவேளை அப்படி செய்தாலும், அது 20 ஆண்டு பழமையானது. பெரும்பாலும் பழமையான ஆவணங்களுக்கு சட்ட ரீதியான பிரச்சினைகள் வருவதில்லை.

ஆனால் சமீபத்திய வருடம் போல, யாராவது ஆவணங்களில் திருத்தம் செய்து விட்டால், சட்டபூர்வமாகவும் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதுமட்டுமின்றி சிலருக்கு சட்டென பார்க்கும்போது, அது 2000மாவது ஆண்டா, 2020வது ஆண்டா என்பதிலும் சில குழப்பம் ஏற்படும்.

இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், சமத்தாக, 2020 என்று எழுதி விடுங்களேன்