
கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்லை என்றும், உடல் ரீதியாக சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன. கேரளா மாநிலத்தில், குடிநீர் குடிக்கவே காலை மற்றும் நண்பகலில் இரண்டு முறை 'குடிநீர் பெல்' நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை கர்நாடகத்திலும் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
கர்நாடகத்தில் 'குடிநீர் பெல்' நடைமுறை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் காலையில் ஒரு முறை, மதிய உணவுக்கு பிறகு என ஒரு முறை ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த 'குடிநீர் பெல்' ஒலிக்க செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் வீதம் 20 நிமிடம் ஒதுக்க வேண்டும். இந்த 20 நிமிடத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.