பயோமெட்ரிக் கருவியில் வருகைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள பள்ளிக் கல்வித்துறை அதற்கான விளக்கத்தை வரும் 28-ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் ஆதாா் எண்ணுடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவிகள் கல்வித்தகவல் மேலாண்மை ('எமிஸ்') இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் வருகைப் பதிவு நேரம், தகவல் என்று அனைத்தையும் அதன் மூலம் கல்வி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பயோமெட்ரிக் கருவியில் அனைத்து ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் தங்களது வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பயோ மெட்ரிக் மூலம் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 28-ஆம் தேதிக்குள் பயோ மெட்ரிக் கருவியில் ஏன் வருகையைப் பதிவு செய்யவில்லை என்று அதற்கான காரணத்தை பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் விளக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

ஏற்கெனவே தெரிவித்தபடி இனி பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீதும், உரிய விளக்கம் அளிக்காத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here