புதுக்கோட்டை,ஜன.11:தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்பத் துறை மூலம் மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த சிந்தனை, மனப்பாங்கை வளர்க்கவும் அறிவியல் சார்ந்த செயலாக்கத் திறனை அதிகரித்து 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களிடையே இருந்து இளம் ஆராய்ச்சியாளரை உருவாக்கவும் இன்ஸ்பயர் விருதினை வழங்கி வருகிறது.
அரசு, உதவி பெறும், தனியார் நடுநிலை, மெட்ரிக், உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளின் அறிவியல் திறன் அடிப்படையில் பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி தனது கண்டுபிடிப்பை மாவட்ட அளவில் அவர் காட்சிப்படுத்த வேண்டும்.

இதில் தேர்வு செய்யப்படும் மாணவர், மாநிலப் போட்டிக்கும் பின்னர் அதன் மூலமாக தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதி பெறுவார். அதன்படி புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான இளம் ஆராய்ச்சியாளரைத் தேர்வு செய்வதற்கான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 
தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர்  த.விஜயலட்சுமி கலந்து கொண்டு பேசியதாவது:மாணவர்கள் அனைவரும்  வகுப்பறையில் கவனிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.பாடத்தை மட்டும் கவனித்தால் போதாது.நடந்து செல்கின்ற பாதை,செல்கின்ற பாதையில் கவனிக்கின்ற பொருள்கள்,தாவரங்கள் எல்லாவற்றையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு கூர்ந்து கவனிக்க வேண்டும்.ஏன்,எதற்கு,எப்படி என்ற அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டும்.மனம் போன போக்கில் போகக் கூடாது.மாணவர்கள் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும்.முன்பெல்லாம் நாங்கள் விடுதியில் தங்கி படிக்கும் பொழுது பணம் தேவை என்றால் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி மணியார்டர் பெற்றுக் கொள்வோம்..ஆனால் இன்றைக்கு வளர்ந்து வந்த அறிவியல் வளர்ச்சியில் நீங்கள் இங்கிருந்தே உங்கள் கைபேசி மூலம் செய்தி அனுப்பி உடனே பணபரிவர்த்தனையை செய்து கொள்கிறீர்கள் .நாங்கள் படிக்கும் காலத்தில் பள்ளிகளில் கணினி என்பதே கிடையாது.ஆனால் இன்றைக்கு நீங்கள் கணினி உதவியுடன் இணையத்தை பயன்படுத்தி கல்வி கற்கின்றீர்கள்.மேலும் உங்களது கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் மேல்நிலைப்பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வக  வசதி உள்ளது.எனவே அத்தகைய ஆய்வகங்களை நீங்கள் உங்கள் கண்டுபிடிப்புகளுக்கு நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் எண்ணங்களை தவறான பாதையில் கொண்டு செல்லாமல் ஆக்கப்பூர்வமான நல்ல பாதையில் கொண்டு செல்லுங்கள்.மாணவர்கள் அனைவரும் புதுமையான முறையில்  செலவில்லாமல் எளிய பொருள்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.மேலும் ஒவ்வொரு மாணவனும் தங்களிடம் உள்ள அறிவியல் அறிவை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள் என்றார்.
கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளிவதலைமையாசிரியர் இரா.சோமசுந்தரம் வரவேற்றார்.இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ௭ஸ்.இராஜேந்திரன்,புதுதில்லி அறிவியல் தொழில்நுட்ப துறையின் மேலிடப் பார்வையாளர் எம்.நாகராஜன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் இரா.கபிலன் (உயர்நிலை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( மேல்நிலை) ரெ.ஜீவானந்தம் நன்றி கூறினார்.

கண்காட்சியில் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். 

மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் நாராயணன் ,டாக்டர் ஆர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி அண்ணா அறிவியல் மையத்தைச் சேர்ந்த ஆர்.செந்தில் முருகன் ஆகியோர்  அடங்கிய குழுவினர் படைப்புகளைத் தேர்வு செய்தனர்.

இந்தக் கண்காட்சியில் நடைசாதனம் மூலம் மின்சார உற்பத்தி,ஆற்றுபடுகையில் சிறு அணையின் மூலம் நீர்சேமித்தல் தீயணைப்புத்துறை,மருத்துவத்துறை,போக்குவரத்துத்துறை,காவல் துறை உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

இதில் மௌண்ட்சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் தனூஷ் ஸ்ரீனிவாசனின் படைப்பு முதலிடமும்,எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சி.ஜோதிகாவின் படைப்பு இரண்டாமிடமும்,மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் பி.குகநேசனின் படைப்பு மூன்றாமிடமும் பிடித்தது.முதல் மூன்று இடங்களைப் பிடித்த  மாணவ,மாணவிகள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அங்கு தேர்வு செய்யப்படும் மாணவர் தனது படைப்பை புது தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் காட்சிப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.