அனைத்து மாவட்டங்களிலும், தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகளை கணக்கெடுத்து, அவற்றை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


தி.மு.க., - பிச்சாண்டி:

நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாகவும், உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாகவும் நிறைய இடங்களில், தரம் உயர்த்த வேண்டி உள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஒரே ஆண்டில், ௧௦௦ பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. என் தொகுதியில், பள்ளியை தரம் உயர்த்த, பணம் செலுத்தி, பல ஆண்டுகளாகியும், தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. பல கிராமங்களில், பஸ் வசதி இல்லை. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். பஸ் வசதி இல்லாத கிராமங்களில் உள்ள, பள்ளிகளை தரம் உயர்த்தினால், மாணவர்கள் பஸ்சை தேட வேண்டியதில்லை. எனவே, பள்ளிகளை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், கூடுதல் மாண வர்கள் உள்ள பள்ளிகளில், தரம் உயர்த்தப்பட வேண்டியதை கண்டறிந்து, அவற்றை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில்,ஒரே ஆண்டில், 225 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தி.மு.க., - தங்கம் தென்னரசு:
உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த, 1 லட்சம் ரூபாய்; மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, 2 லட்சம் ரூபாய் நிதி கேட்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசு திட்டங்களில், பள்ளியை தரம் உயர்த்த, நிதி ஒதுக்கும் போது, மக்களை நிதி செலுத்தும்படி கூறுவது தேவையற்றது. எனவே, பள்ளியை தரம் உயர்த்த, மக்களிடம் பணம் வசூலித்து, நிதி செலுத்த வேண்டும் என்ற, நிபந்தனையை தளர்த்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்:
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, இந்த நிபந்தனை தளர்த்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும், நிபந்தனையை தளர்த்துவது குறித்து, முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.


Join Telegram& Whats App Group Link -Click Here