ராமநாதபுரம்:புதிய பாடத்திட்டம் அறிமுகமான நிலையில் நேற்று பிளஸ் 2 இயற்பியல் பொதுத்தேர்வு நடந்தது. மாணவர்கள் எதிர்பார்த்தவாறு வினாக்கள் இல்லை. ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தாக ராமநாதபுரத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.*ஜி.சினேகா, ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. சிந்தித்து எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அனைத்து வினாக்களுக்குக்கும் முழுமையாக பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சென்டம் மிகவும் கடினம்.*எம்.பாலாமணி, புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: அனைத்து வினாக்களும் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.
புத்தகத்தை முழுமையாக படித்திருந்தால் மட்டுமே முழுமையாக விடையளிக்க முடியும். பெற்றோர் ஆசிரியர் கழக மாதிரி வினாக்களில் இருந்து 5 மதிப்பெண் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. 2 மதிப்பெண் வினாக்கள் 'டுவிஸ்ட்' செய்து கேட்கப்பட்டு இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன.

சென்டம் எடுப்பது கடினம்.*எம்.விசாலி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புல்லாணி: புதிய பாடத்திட்டம் என்பதால் எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெறவில்லை. 40 சதவீத வினாக்கள் கடினமாக இருந்தன. பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்திருந்தால் மட்டுமே சென்டம் எடுக்க முடியும். ஒரு மதிப்பெண் வினாக்களில் கணக்குகள் கேட்கப்பட்டிருந்தன.

இவற்றிற்கு விடையளிப்பது கடினமாக இருந்தது.* டி.அகஸ்டினா ஜெயக்குமாரி, ஆசிரியை, புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளி, : வினாக்கள் மிக எளிமை என்றும், மிக கடினம் என்றும் சொல்லும் அளவில் இல்லை. சராசரி வினாத்தாளாக இருந்தது. 5 மதிப்பெண் வினாக்களில் மாணவர்கள் எதிர்பார்த்தது வரவில்லை. இருந்தும் பதிலளிக்கும் படியாக இருந்தது.

2, 3 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. புதிய பாடத்திட்டம் என்பதால் ஆசிரியர்கள் முழுமையாக கற்பிக்க மட்டுமே முடிந்தது. மாணவர்கள் முழுமையாக புத்தகத்தை படித்திருக்க முடியாது. அதற்கான நேரமும் இல்லை.

திருப்புதல் தேர்வுகள் நடத்த முடியவில்லை. நேரமின்மையால் மாணவர்களை முழுமையாக தேர்வுக்கு தயார்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர்கள் சென்டம் எடுப்பது கடினம். அதிக மார்க் எடுக்க முடியும்.