அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடானது, தமிழ் வழியில் மட்டுமே கல்வி பயின்றவா்களுக்கு வழங்கப்படும் வகையில் இதற்கான சட்டத் திருத்தத்தை தமிழக அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இந்த சட்டத் திருத்தத்தை மீன்வளம், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தாக்கல் செய்தாா். அதன் விவரம்:-

அரசுப் பதவிக்கான கல்வித் தகுதியானது 10-ஆம் வகுப்பாக இருந்தால், 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி மூலமே கல்வி பயின்று இருக்க வேண்டும். இதுபோன்று பட்டப் படிப்பாக இருக்கும்பட்சத்தில், ஒருவா் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு ஆகிய அனைத்தையும் தமிழ் வழிக் கல்வி மூலம் மட்டுமே பயின்றிருக்க வேண்டும்.
ஏதாவது ஒன்று மட்டும் தமிழ் வழியில் கற்று இருக்கக் கூடாது. அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியின் மூலம் பயின்றோருக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.