போன வருஷம் 2 பேர் முதல் மதிப்பெண் எடுத்தாங்க. 2 பேருக்கும் அரை பவுன் மோதிரம் கொடுத்தேன். 5 பேரு முதல் மதிப்பெண் எடுத்தாலும் மோதிரம் கொடுப்பேன் என்கிறார் பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மு.மாரிமுத்து.

புதுக்கோட்டை அருகே இருக்கிறது பெருமாநாடு அரசு உயர் நிலைப்பள்ளி. உயர் நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டதிலிருந்து 5 வருடமும் பள்ளிக்கு 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுக்கொடுக்கும் மாணவர்கள் கபடி, தேக்வாண்டோ, சிலம்பம், யோகா என்று விளையாட்டிலும் கில்லியாகத் திகழ்கின்றனர். படிப்புடன், விளையாட்டுக்கும் பள்ளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாகவே 100 -க்கும் குறைவாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை இன்று இருமடங்காக உயர்ந்துள்ளது.
மாணவர் சேர்க்கைக்குப் பள்ளித் தலைமையாசிரியர் மட்டுமே முக்கியக் காரணம் என்று தலைமையாசிரியரைக் கை காட்டுகின்றனர் சக ஆசிரியர்கள். ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்ணைப் பெறும் மாணவருக்குத் தன் சொந்தச் செலவில் அரை பவுன் மோதிரத்தைப் பரிசாகக் கொடுத்து வருகிறார். பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களை ஊக்குவிக்கவும் தன் சொந்தச் செலவில் பல்வேறு நலப்பணிகளைச் செய்து வரும் தலைமையாசிரியர் மாரிமுத்து, தலைமையாசிரியர்களில் தனித்துவமாகத் தெரிகிறார்.
இதுபற்றி தலைமையாசிரியர் மாரிமுத்துவிடம் பேசினோம், ``நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்ட போது நான் தலைமையாசிரியராகப் போனேன். அப்போ, 84 மாணவர்கள் மட்டும்தான் இருந்தாங்க. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு வந்திருச்சு. சேர்க்கை அதிகரிக்கப் பள்ளியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தேன். ஏப்ரல் முதல் நாளே, ஆசிரியர்களைக் கூட்டிக்கிட்டு கிராமத்துக்குப் போயிடுவோம்.
அசத்தும் அரசுப் பள்ளி
அசத்தும் அரசுப் பள்ளி
அரசுப்பள்ளியில் கொண்டுவரப்பட்டுள்ள நல்ல திட்டங்களைக் கூறி அட்மிஷன் போடுவோம். 84 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை இன்று 194 ஆக உயர்த்தி இருக்கோம். 84-க்கு அப்புறம் போட்ட அட்மிஷன் எல்லாம் மாணவர் அவரவர் வீட்டிலேயே வைத்துப் போடப்பட்டதுதான். மாணவர் சேர்க்கை அதிகரிக்க என்னோட முயற்சி மட்டுமல்ல ஆசிரியர்கள் முயற்சியும் முக்கியக் காரணம். நான் ஒரு கல் உடைக்கும் தொழிலாளியின் மகன். என்னை ஒரு ஆசிரியர்தான் படிக்க வச்சாங்க. என்னால, பல மாணவர்கள் படிக்கணும்ங்கிறதுதான் என்னோட நோக்கம்.

அதனாலதான் என்னோட 25 சதவிகித ஊதியத்தை மாணவர்களுக்காகச் செலவிடத் திட்டமிட்டேன். மாணவர்களிடம் ஒரு ஆரோக்கியமான போட்டி உருவாகவும் உற்சாகப்படுத்தவும் தான் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரை பவுன் மோதிரம் வழங்குவதாக அறிவித்தேன். அடுத்த வருஷமே இந்தத் திட்டத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். போன வருஷம் 2 பேர் முதல் மதிப்பெண் எடுத்தாங்க.
அசத்தும் அரசுப் பள்ளி
அசத்தும் அரசுப் பள்ளி
2 பேருக்கும் அரை பவுன் மோதிரம் கொடுத்தேன். 5 பேரு முதல் மதிப்பெண் எடுத்தாலும் மோதிரம் கொடுப்பேன். அதோடு, பள்ளிக்குச் சொந்தச் செலவில் என்னால முடிஞ்ச தேவைகளைச் செய்வதற்கு ஆசிரியர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். கிராம மக்களும் இப்போ பள்ளிக்கு உதவ முன்வந்திருக்காங்க. ஆசிரியரக்ள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி வளர்ச்சிக்கு உதவினால், மாவட்டத்தின் முன்மாதிரிப்பள்ளியாக மாற்றிடலாம்" என்கிறார்.