கரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது முதல் அறிவுறுத்தலாக இருக்கிறது.

அதன்படி, கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்பது குறித்து விடியோக்கள் மூலமாக அரசு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், சோப்பு அல்லது ஹேண்ட் வாஷர் கொண்டு கைகளை கழுவ முடியாத சூழ்நிலையில் 'சானிடைசர்' எனும் கை சுத்தப்படுத்தும் திரவத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.

சானிடைசர் என்றால் என்ன?

சானிடைசர் என்பது ஆல்கஹால் பெருமளவில் கொண்டு தயாரிக்கப்படும் கைகளை சுத்தப்படுத்தும் ஒரு திரவம். அசுத்தமான பொருட்களை தொட்டாலோ, வெளியில் சென்று வந்தபிறகு கைகளை சுத்தப்படுத்த இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மருத்துவர்கள் இதனை அடிக்கடி பயன்படுவதை நாம் பார்த்திருப்போம். சானிடைசரை சில துளிகள் கைகள் முழுவதும் தடவும்போது அது கைகளில் உள்ள பாக்டீரியா, வைரஸை அழித்து விடும்.

இயற்கை முறையில் வீட்டிலேயே சானிடைசர் தயாரிக்கலாம்

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் சானிடைசருக்கு தட்டுப்பாடும் நிலவி வருகிறது. மேலும், அந்த சானிடைசர் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டிருக்குமா? அதில் கெமிக்கல் பொருட்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டிருக்குமா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.

இதற்குத் தீர்வாக நீங்கள் வீட்டிலேயே சானிடைசர் தயாரிக்கலாம். கடைக்குச் சென்று வாங்க முடியாத சூழ்நிலையில் இதனை வீட்டிலேயே தயாரிக்க முயற்சிக்கலாம்.

சானிடைசர் தயாரிப்பது எப்படி?

சானிடைசர் தயாரிக்க வெறும் மூன்று பொருட்களே தேவை.

- ஐசோபிரைல் அல்லது ரப்பிங் ஆல்கஹால் (99 சதவீதம் ஆல்கஹால்)

- கற்றாழை ஜெல்

- தேயிலை மர எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் அல்லது இதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தலாம்.

கையில் உள்ள கிருமிகள் முழுதும் அழிக்கப்பட வேண்டுமெனில் ஆல்கஹால், கற்றாழை முறையே 2:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள்

3/4 கப் ஐசோபிரைல் அல்லது ரப்பிங் ஆல்கஹால் (99 சதவீதம்)

1/4 கப் கற்றாழை ஜெல் (இது உங்கள் கைகளை மென்மையாக வைத்திருக்கவும், ஆல்கஹாலின் கடுமையான தன்மையை எதிர்க்கவும் உதவும்)

லாவெண்டர் எண்ணெய் 10 துளிகள் அல்லது எலுமிச்சை சாறு.

இத்துடன் நறுமணத்திற்கு சிறிது கிராம்பு, யூகலிப்டஸ், பிற எண்ணெய் - இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

தயாரிப்பு முறை

மேற்குறிப்பிட்டவற்றில் ஆல்ஹகாலை முதலில் ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் சுத்தம் செய்த கற்றாழை ஜெல் மற்றும் எண்ணெய், நறுமணப்பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும். கலக்கும்போது கைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. ஒரு சிறிய கரண்டி கொண்டு அனைத்தும் ஒன்றோடொன்று சேரும்வரை கலக்க வேண்டும். ஒன்றாக கலந்தவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தத் தொடங்கலாம்.

பயன்படுத்தும் முறை:

தயாரித்த சானிடைசரில் ஒரு சில துளிகள் திரவத்தை எடுத்து கைகளில் தடவவும். இப்போது இரண்டு கைகளையும் சேர்த்து கை உலரும் வரை நன்றாக தேய்க்க வேண்டும். சுமார் 30 முதல் 60 வினாடிகள் தொடர்ந்து தேய்க்க வேண்டும். கை விரல்கள், உள்ளங்கை என கை முழுவதும் சானிடைசர் படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

சானிடைசரை பயன்படுத்துவதற்கு முன்னர் கை அழுக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கை அழுக்காக இருந்தால் கைகளை சோப்பால் நன்றாக கழுவிவிட்டு சிறிது நேரம் கழித்து சானிடைசரை பயன்படுத்த வேண்டும்.

கைகளை கழுவும் முறை

சானிடைசரை பயன்படுத்தினாலும், கைகளை கழுவுவது எப்போது சிறந்தது. கரோனா போன்ற கொடூர வைரஸ்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள சானிடைசரை பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவ்வப்போது தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும். ஒருமுறை கைகளை நன்றாக கழுவிவிட்டு அதன்பின்னர் இருந்த இடத்திலேயே சானிடைசரை பயன்படுத்தலாம்.

இருமல், தும்மல் அல்லது சாப்பிடுவதற்கு முன், வெளியே சென்று வந்த பிறகு, அசுத்தமான மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு கைகளை கழுவுவது அவசியம். கைகளை கழுவுவதற்கு சுத்தமான நீரையே பயன்படுத்துங்கள். கைகளை சோப்பு போட்டு சுமார் 20 வினாடிகள் கழுவ வேண்டும். இதன்பின்னர் ஆல்கஹால் கொண்டு தயாரித்த சானிடைசரை பயன்படுத்தும்போது நோயை உருவாக்கும் கரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் தாக்காமல் தடுக்க முடியும்.

Join Telegram& Whats App Group Link -Click Here