தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கை காரணமாக ஊரடங்கு நடவடிக்கை தொடரும் சூழலில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வு தவிர அத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வைகோ உள்ளிட்ட தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் முன்னேற்றச் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க மே 15 வரை பள்ளிகள் மூட வாய்ப்பு உள்ளதால் பள்ளித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் என கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால், பள்ளித் தேர்வுகளில் அந்தந்த பள்ளிகள் கடுமை காட்டி மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டதால் அதன் அடிப்படையில் தேர்வை முடிவு செய்வது சரியல்ல என பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் வணிகச்சந்தையில் கிருமி நீக்க சுரங்கப்பாதையைத் தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

'கோபிசெட்டிபாளையத்தில் 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. பொதுமக்கள் வணிக வளாகங்கள், பொது இடங்களுக்குச் செல்லும் போது சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அதை முதல்வர் தான் முடிவு செய்யவேண்டும்.

கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்திவரும் அரசு, கரோனா காரணமாக ஊரடங்கு தள்ளிப்போவதால் தேர்வு குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்க வாய்ப்புள்ளது''.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Join Telegram& Whats App Group Link -Click Here