ஜூம் செயலிக்கு போட்டியாக, காலவரை எதுவுமின்றி 50 பேர் வரை வீடியோ அழைப்பில் உரையாட கூடிய வகையில், 'மெசஞ்சர் ரூம்ஸ்' என்ற புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்கள் கடந்த 2 மாதங்களாக அதிகளவில் ஜூம், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்பு செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஜூம் செயலியில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்ததால் கூகுள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதித்திருந்தன.
இந்நிலையில், ஜூம் செயலிக்கு மாற்றாக பேஸ்புக் தனது புதிய மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பேஸ்புக் பயனர்கள் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் ஆப் மூலம் யாரை வேண்டுமானாலும் 50 பேர் வரை வீடியோ அழைப்பில் இணைத்து கொள்ள முடியும். வீடியோ அழைப்பிற்கு என குறிப்பிட்ட கால வரையறையும் எதுவும் இல்லை. பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவரும் வீடியோ அழைப்பில் இணையலாம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடியோ அழைப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது என பேஸ்புக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் பிரைவசி பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பேஸ்புக் விதிகளை மீறுவோர் குறித்து புகார் அளிக்க முடியும். அதில் எந்த வீடியோ அல்லது ஆடியோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் பேஸ்புக் புகார்களை கேட்காது எனவும் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை உருவாக்குவதற்கான வழியை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
செல்போன் அல்லது கணினி மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியில் இணையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென செயலி ஏதும் பதிவிறக்கம் செய்யவேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.