காரிமங்கலம்: கல்லூரிகள் திறக்கப்பட்டவுடன் 2019-20க்கான தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சியில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் அமைப்புச்சாரா ஓட்டுநர் நலவாரியம் ஆகியவற்றில் பதிவு செய்த 1,63,785 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கல்லூரிகள் துவக்கப்பட்டவுடன் 2019-20க்கான தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் தொடங்கிய உடனே முதற்கட்டமாக தேர்வுகள் நடைபெறும்.
அதன்பின் 2020-21 கல்வியாண்டுக்கான பாட வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தேர்வுகளை சந்திக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கல்லூரிகள் தொடங்கிய பின் தேர்வுகளுக்கு அவகாசம் அளிக்கப்படும் என மாணவர்கள் நினைத்துவிடக் கூடாது. பாடங்களில் உள்ள சந்தேகங்களை மாணவர்கள் பேராசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு, தேர்வுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.