கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பாடம் நடத்தும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.

இந்த நடைமுறையில், மாணவர்களின் பெற்றோரையும் ஈடுபடுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ், நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 'பள்ளி - வீடு' சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியமான தேர்வுகள் மட்டும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தலைவர் அனிதா கார்வால், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால், மத்திய அரசு பிறப்பித்து உள்ள ஊரடங்கு உத்தரவு, மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், மாணவர்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது. இதற்காக, 'பள்ளி - வீடு' என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம். இந்த திட்டத்தில், மாணவர்களின் பெற்றோரையும் கட்டாயம் பங்கேற்கச் செய்ய வேண்டும். இது தொடர்பாக, பெற்றோரிடம், ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பாடம் நடத்துவது, மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதுஎன, வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், ஐந்து முக்கிய அம்சங்களை பின்பற்ற வேண்டும். முதலாவதாக,தங்கள் குழந்தைகளின் தனித் திறமையை பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில், பெற்றோருக்கான சில கேள்விகளை, ஆசிரியர்கள் வரையறுக்க வேண்டும்.

ஊக்குவிக்க வேண்டும்

இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு, அவ்வப்போது ஆசிரியர்கள் சென்று, அவர்களது பின்னணி குறிந்து அறிந்து கொள்ளலாம். அடுத்ததாக, மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய, அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது என்பதை, பெற்றோரிடம் ஆசிரியர்கள் விளக்க வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தைகள் கல்வி கற்பதையும், செய்முறை பயிற்சியையும் ஊக்குவிக்க வேண்டும்.பாடப்புத்தங்களில் இல்லாத பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை, மாணவர்களும், பெற்றோரும் தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கையை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

உதவி மையங்கள்!

பல்கலை மானிய குழு செயலர் ரஜ்னிஸ் ஜெயின் கூறியதாவது:

கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்கள் தனித்து இருப்பதால், உளவியல் ரீதியாக, அவர்களுக்கு பிரச்னை ஏற்படலாம். எனவே, இது போன்ற மாணவர்களுக்கு உதவுவதற்காக, அனைத்து பல்கலையிலும், இதற்கான உதவி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், ''ஊரடங்கு உத்தரவு முடிந்தபின், பள்ளி மற்றும் கல்லுாரிகளை மீண்டும் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். கொரோனா பரவும் வீரியத்தின் அடிப்படையில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

Join Telegram& Whats App Group Link -Click Here