புது தில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வரும் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அகவிலைப்படி உயர்வு நடைமுறை செயல்படுத்தப்படும் நிலையில், கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மத்திய அரசு வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், மத்திய அரசு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி 4 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியா்கள் 48.34 லட்சம் பேரும், ஓய்வூதியதாரா்கள் 65.26 லட்சம் பேரும் பயனடைவாா்கள் என்றும் கூறப்பட்டது.
Join Telegram& Whats App Group Link -Click Here