கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு நான்கு கட்டங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதல் மூன்று கட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பித்த நிலையில் நான்காம் கட்டத்தில் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது மத்திய அரசு.

ஆனால், நான்காம் கட்ட ஊரடங்கின் போது வழங்கப்பட்ட தளர்வு காரணமாக நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அதன் மூலம் மொத்த பாதிப்பு 1.50 லட்சத்தை நெருங்குகிறது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவது, பள்ளிக் கல்லூரிகளுக்கான பணிகளை தொடங்குவது என இருந்த மத்திய அரசு, தற்போது தொடக்கப் பள்ளிகளை செப்டம்பர் மாதத்தில் தொடங்கினால் போதும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, "கொரோனாவினால் ஏற்பட்ட நிலமை சீரானதும் முதலில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை மட்டும் தொடங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பறைகளிலும் 15 முதல் 20 வரையிலான மாணவர்கள் மட்டுமே இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

வகுப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை நிலவினால் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகளை நடத்தலாம். தினமும் வகுப்பறைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பள்ளிகளுக்கும் நுழைவதற்கு ஒரு வழியும், வெளியேறுவதற்கு ஒரு வழியும் அமைக்க வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு வெளியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள் கூடுவது தவிர்க்க வேண்டும்.

மேலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்று மாதங்களுப்பின் அதாவது செப்டம்பர் மாதத்தில் வகுப்புகளைத் தொடங்கினால் போதும். அதுவரை அனைத்து மொழிகளிலும் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்தலாம்.

தனியார் பள்ளிகளைப் பொறுத்த வரை பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை ஏற்கெனவே தொடங்கி நடத்தி வருகின்றன. புதிய வகுப்புக்கான புத்தகங்களை பள்ளிகள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றன." என தெரிவித்துள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here