அன்னவாசல்,மே.11: புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 200 ஏழை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும்  ரூ500 மதிப்பிலான பலசரக்கு மற்றும் காய்கறிகளை அப்பள்ளி தலைமையாசியர் , ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளரகள் வழங்கி அசத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஏழை மக்களின் நிலை சொல்ல முடியாத அளவுக்கு வறுமையுடன் இருக்கிறது.இந்நிலையில் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து அப்பள்ளியில் பயின்று வரும் தாய் தந்தையை இழந்த ஏழை மாணவர்கள் 170 பேருக்கும் ,வயலோகம்,புல்வயல்,பெருமாநாடு ஆகிய பகுதிகளில் துப்புரவு தொழில் செய்யும் 20 பேருக்கும், அன்றாட கூலி வேலை செய்பவர்கள் ஆதரவற்ற விதவைள் 10 பேர் என மொத்தம் 200 ஏழைமாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  ஒவ்வொருவருக்கும் ரூ 500 மதிப்பிலான பலசரக்கு மற்றும் காய்கறிகளை வழங்கி அசத்தியுள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சி வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர் யோ.ஜெயராஜ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கா.காவூதின் முன்னிலையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( பொறுப்பு) எம்.கோவிந்தராஜ்,வயலோகம் பஞ்சாயத்து தலைவர் செண்பகவள்ளி சேவுகன் ஆகியோர் ரூ 1 இலட்சம் மதிப்பிலான நிவாரணப்  பொருட்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக குழு உறுப்பினர்கள்,வயலோகம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள்,அருகாமைப்பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து வயலோகம் அரசு மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் யோ.ஜெயராஜ் கூறியதாவது: வயலோகம் பள்ளிக்கு வரும் மாணவ,மாணவிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் படிக்கிறார்கள்.குறிப்பாக தாய் தந்தையை இழந்த குழந்தைகளும்,அன்றாடம் கூலி வேலை செய்து  படிக்க வைப்பவர்களின் குழந்தைகளும் கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்படுவதை அறிந்தேன்.எனவே எம் பள்ளி ஆசிரியர்களிடமும் அலுவலக பணியாளர்களிடமும் இவர்களுக்கு ஏதாவது ஓர் வகையில்  நாம் உதவ வேண்டும் என கூறினேன்.அவர்கள் ஒவ்வொருவரும் ரூ 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை நன்கொடை வழங்கினார்கள்.அப்பணத்தில் அரிசி ,பருப்பு,எண்ணெய்,கத்தரிக்காய்,தக்காளி,வெங்காயம்,உருளைக்கிழங்கு ,வாழைக்காய் என ரூ 500 மதிப்பிலான பல சரக்கு மற்றும் காய்கறிப்பொருட்களை மொத்தம் 200 ஏழை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வழங்கினோம்.இதனால் வயலோகம் பகுதியிலுள்ள ஏறத்தாழ 20 கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர் இல்லாத மாணவ,மாணவியர்களின் குடும்பத்தினர் பயனடைந்தனர் என்றார்.