கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவுத்தொகை எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது என விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் செலவுத்தொகையாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில், 2016-17 ஆம் ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத்தொகையாக நிர்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகை, 2017-18 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில், மாணவர்களின் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21 ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 28,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 83,16,237 மாணவர்களுக்கு அரசு செலவு செய்கிறது. ஒரு மாணவருக்கு, அரசு சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 11 ஆயிரம் என செலவு நிர்ணயித்தது தவறு எனக் கூறப்பட்டுள்ளது.

2017-18 முதல் 2019-20 ஆம் கல்வியாண்டு வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கான செலவுத் தொகையை மறு நிர்ணயம் செய்து, மீத தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவை குறைத்து கணக்கிட்டது எப்படி என ஜூன் 13ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.Join Telegram& Whats App Group Link -Click Here