புதுடெல்லி: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் படிப்படியாக திறக்க அனுமதி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 3 கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது, பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முடிவு செய்துள்ள மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், சமீபத்தில் நடந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் ஆலோசனை நடத்தி உள்ளது.
இதன்படி, செப்டம்பர் 1 முதல் நவம்பர் 14ம் தேதி வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

அப்போது பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, இம்மாத இறுதியில் வெளியிடப்படும் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வில் தெரிவிக்கப்பட உள்ளது. அதே சமயம், கொரோனா பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து எப்போது பள்ளிகளை திறக்கலாம் என முடிவெடுக்கும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால், அந்தந்த மாநிலங்களின் நிலைமை பொறுத்து மாநில அரசுகள் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து முடிவெடுக்கும்.

* பள்ளிகளை திறப்பதில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் பாணியை பின்பற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
* இதன்படி, வகுப்புகள் 2 ஷிப்ட் முறையில் நடக்கும். ஒரு வகுப்பிற்கு 4 அமர்வுகள் இருந்தால், காலையில் 2 வகுப்புகளும், பிற்பகலில் 2 அமர்வுகளும் இடம் பெறும்.
* காலை ஷிப்ட் காலை 8 முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் ஷிப்ட் 12 மணி முதல் 3 மணி வரையிலும் செயல்படும்.
* ஒவ்வொரு ஷிப்ட்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
* 5ம் வகுப்பு வரை இப்போதைக்கு அனுமதி வழங்கப்படாது. 5ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது சிரமம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
* செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும், முதல் 15 நாட்களுக்கு 10,11,12ம் வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும். அதன்பின், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு அனுமதி தரப்படும்.