ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தன. அப்போது, மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது, ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ் பத்திரிகையில் விளம்பரம் வெளியிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Join Telegram& Whats App Group Link -Click Here