11-ம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நுழைவுத்தேர்வினை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால், 15 சதவீதம் வரை மட்டும் அனுமதிக்க வேண்டும்.மிக அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை அனுமதிக்க வேண்டும்,' என கூறப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 11-ம் வகுப்புக்கு நுழைவு தேர்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெறுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 11-ம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.