சில நேரங்களில், ஒரு வெளிப்பாடானது - ஒட்டுமொத்த உலகின் மீதான நமது பார்வையையும் கணப்பொழுதில் மாற்றி விடும். நாம் வாழும் இந்த உலகம், எந்த அளவிலான பிளாஸ்டிக் தன்மையை கொண்டுள்ளது என்பது சார்ந்து வெளியான சமீபத்திய ஆய்வறிக்கையும் - அப்படியான ஒரு வெளிப்பாடு தான்.

இன்று முதல் இந்த உலகின் மீதான உங்களின் பார்வை மாறுபடும். அதென்ன ஆய்வு.? அப்படி என்ன அதிர்ச்சிகரமான முடிவை அது வெளிப்படுத்தியுள்ளது.?




ஆர்டிக் மற்றும் ஆழமான பசிபிக் வரை.!
நமது சமுத்திரங்கள், எந்த அளவிலான பிளாஸ்டிக் கொண்டு நிரம்பியுள்ளதென்பதை நாம் கண்கூடாய் அறிவோம். மிதக்கும் பிளாஸ்டிக்குகள் கடல்களில் மிகப்பெரிய, அசிங்கமான சுழல்களால் உருவாக்கி, ஆர்டிக் மற்றும் ஆழமான பசிபிக்கின் தொலைதூர கடற்கரைகளை கூட சுற்றியுள்ளன என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

அனுதினமும் குடிக்கும் குழாய் நீரில்.!
ஆனால் நிலத்தின் ஒட்டுமொத்த மாசுபாடு மறைந்துள்ளது; மறைக்கப்பட்டுள்ளது. மலைகள், ஆறுகள், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலிருந்து நமக்கு கிடைக்கும் குழாய் தண்ணீரில் நம் கற்பனைக்கூட செய்து பார்க்கமுடியாத சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளது. அதாவது - நாம் அனுதினமும் குடிக்கும் குழாய் நீரில் நுண்ணிய பிளாஸ்டிக் இழைகள் நிரம்பியுள்ளன.


ஆய்வுக்குட்படுத்திய பின்னர்.?
இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் குழாய் நீரிலும் இந்த மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு டஜன் நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குழாய் நீர் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய பின்னர் ஒட்டுமொத்தமாக, 83 சதவீத மாதிரிகள் நுண்ணிய பிளாஸ்டிக் இழைகள் மூலம் மாசுபட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.  


அந்த பட்டியலில் முதலிடம்.?
ஆய்வின் முடிவில் எந்தெந்த நாடுகளின் குழாய் நீரில் அதிக அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு உள்ளதென்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் முதலிடம் வகிப்பது - அமெரிக்கா. இதில் கொடுமை என்னவென்றால் சோதனைக்குட்படுத்தப்பட்ட குழாய் நீரானது நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவர்ஸ் கட்டிடம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையக கட்டிடத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன என்பது தான்.

இந்தியாவிற்கு என்ன இடம்.?
ஆய்விற்கு பின்னர், குறிப்பிட்ட குழாய் நீரில் 94 சதவீதம் என்ற மிக அதிக அளவு மாசு விகிதத்தை அமெரிக்கா கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்க்கு அடுத்த இடங்களில் லெபனான் மற்றும் இந்தியா மிக உயர்ந்த மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு விகிதங்களைக் கொண்டிருக்கின்றன.

உலகமே ஒரு பிளாஸ்டிக் மயம்.!
மறுகையில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு மாசுபாடு விகிதம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிடப்படும் "குறைந்த அளவு மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு விகிதம்" என்னவென்று தெரியுமா.? - 72 சதவிகிதம். ஆக மொத்தம் இந்த உலகமே ஒரு பிளாஸ்டிக் மயமாகிவிட்டதென்பது வெளிப்படை.

நேற்றுவரை..
இந்த ஆய்வின் முடிவு வெளியாகும் முன்தினம் வரையிலாக, அசுத்தமான கடல் உணவுகளின் வழியாகவே மனிதர்கள் பிளாஸ்டிக் நுண்ணுயிரிகளை உட்கொள்கிறார்கள் என்பதால், நாம் பெரும்பாலும் பெருங்கடலில் உள்ள பிளாஸ்டிக் மாசுபாடுகளில் தான் அதிக கவனம் செலுத்தினோம்.

இன்று முதல்..
ஆனால், இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. கடல் உணவுகளை உண்போர்களின் எண்ணிக்கை மற்றும் கடல் உணவுகளில் உள்ள சிக்கலை அறிந்து அவைகளை தவிர்ப்போர்களின் எண்ணிக்கை எங்கே.? அனுதினமும் குழாய் நீரை குடிப்போரின் எண்ணிக்கை எங்கே.? கடல்நீர் மற்றும் நிலத்தடி பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒன்றொடு ஒன்று ஒப்பிட்டால் மிகப்பெரிய வித்தியாசத்தை புள்ளிவிவரங்களின்றியே பார்க்க முடிகிறது.

ஆகப்பெரிய விளைவுகள்.!
சுற்றுச்சூழல் மாற்றம், பூச்சிக்கொல்லிகள், காற்று மாசுபாடு போன்று நாம் எதிர்கொள்ளும் பல சுற்றுச்சூழல் சிக்கல்களைப் போலவே தான், ஆகப்பெரிய விளைவுகளை ஆண்டாண்டு காலமாய் அனுபவித்த பின்ன்னரே நாம் இந்த மைக்ரோபிளாஸ்டிக் மீதான தெளிவுகளையும் பெற்றுள்ளோம்.



பிளாஸ்டிக் கிரகம்.!
ஒருவேளை நாம் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால், நாம் உருவாக்கியுள்ள இந்த பிளாஸ்டிக் கிரகம் உயிர்களுக்கு மிகவும் நச்சுத்தன்மையற்றதாக மாறாமல் போகலாம். இல்லையென்றால், இந்த மாசுபாட்டை சுத்தம் செய்வதென்பது ஒரு வலிமையான பணியாக இருக்கும். அதுவரையிலாக நாம் அனைவரும் குடிக்கும் நீரில், உண்ணும் உணவில், சுவாசிக்கும் காற்றில் என அனைத்திலும் - ஒவ்வொரு நாளும் - மைக்ரோபிளாஸ்டிக்கை அவசர அவசரமாக திணித்துக்கொள்வோம்.