சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கம் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியின் 11 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் மகாலிங்கபுரம் சாலையில் சூசைபுரம் சர்ச் அருகே சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அமைதியான வழியில் போராட்டங்கள் நடத்துவதற்கோ,
விமர்சிப்பதற்கோ தடையில்லை என்றும் அமைதியாக போராட்டங்கள் நடத்துவது தனிநபரின் அடிப்படை உரிமை என்றும் உச்சநீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவிகள் என்பதால் கைது செய்ய போலீஸார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
போலீஸார் மாணவிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை பற்றி எங்களுக்கு கவலையில்லை, நீட் தேர்வால் அனிதாவின் மருத்துவர் கனவு கலைந்தது, நாளை இதே நிலை தான் எங்களுக்கும் ஏற்படும். இன்று அனிதாவுக்கு நடந்தது போல் நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது.
அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த சாலை மறியல் போராட்டம் இதுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாணவிகளிடம் போராட்டத்தைக் கைவிடக்கோரி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெண் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு ஆதரவாக பெற்றோர்களும்,
பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகி்றது.
இந்நிலையில், சம்பள உயர்வுக்கு போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட மாட்டார்கள் என்று கேள்வி எழுப்பிய மாணவிகள், அவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் நுழைவுத் தேர்வுமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை இளைஞர்கள், மாணவ,மாணவிகள் தங்களின் கருத்தை நாள்தோறும் பதிவு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் நீட்டுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணிக்க துவங்கிய போராட்டத்தில்,
தற்போது பள்ளி மாணவ-மாணவிகளும் இணைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..