புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு பணி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர், 8ல் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க, பாடத்திட்டக்குழு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பாடத்திட்டத்துக்கான பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்டக் குழுவும், கலைத்திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஜூலை, 20ல் கருத்தரங்கம் நடத்தி பணியை துவங்கியது.சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை வல்லுனர்களிடம், ஆலோசனைகள் பெறப்பட்டன.இதை தொடர்ந்து, ஆக., 21 முதல், பாட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியது.

கலைத்திட்ட குழுவின் பேராசிரியர்கள் கூடி, பொதுமக்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் அடிப்படையில், பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த வரைவு அறிக்கையை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது. வரும், 8ம் தேதிக்குள் சரிபார்ப்பு பணி முடிந்து, அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன