மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ- - ஜியோ சார்பில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. அரசு பணிகள், அத்தியாவசியப் பணிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கும். அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்பதாக, அரசு தெரிவித்துள்ளது. ஜாக்டோ- - ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, நேற்று(செப்.,6) விசாரித்தது. தொடர்ந்து இன்றைக்கு ஒத்திவைத்தது.

வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்த வேலைநிறுத்தம் இல்லாத வேறு முறைகளை கையாளலாம். பல்வேறு வழிமுறைகள் வழிகள் உள்ளன. போராட்டத்தால் கல்வி, நிர்வாகம் முடங்கும். நிர்வாகம், மருத்துவம், கல்வி போக்குவரத்து பாதிக்கும் வகையில் போராடக்கூடாது. மாணவர்கள் நலனையும் கவனத்தில் கொள்ளவேண்டும் எனக்கூறி, தமிழக அரசு, அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.