திருச்சி, அக்.16: புதியபென்ஷன் திட்டம் ரத்து குறித்து நவம்பர் 30க்குள் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அலுவலகம் திறப்பு நேற்று திருச்சியில் நடந்தது. இதனை திறந்து வைத்த பொதுச்செயலாளர் ரெங்கராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கான 7வது ஊதியகுழு அரசாணை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.5,500 இழப்பீடு ஏற்பட் டுள்ளது. மேலும் 7வது ஊதியக்குழுவில் ரூ.15,200 இழப்பீடு ஊதியத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த ஊதியத்தை சரிசெய்யவும், 21 மாத நிலுவை தொகை கிடையாது என்பதை பரிசீலித்து தவணைகளிலாவது இதனை வழங்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. இதற்கும் உரிய ஆவண செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். இந்த இரண்டு பிரச்னைகளிலும் காலதாமதம் ஏற்பட்டால் ஜாக்டோ-ஜியோ ஒன்றுகூடி அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பது குறித்த கூட்டம் சென்னையில் விரையில் கூட்ட உள்ளோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்றுத்தரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

புதிய பென்ஷன் குறித்து அமைச்சர், முதல்வர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிடம் நவம்பர் 30க்குள் அறிக்கை பெற்று, அதை அமைச்சரைவில் விவாதித்து பின்னர் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.