புதுடெல்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கை: பண மோசடி தடுப்பு சட்டம் மற்றும் வருமான வரிச்சட்டப்படி வங்கி கணக்குகளுடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் ஆதார் எண் பெற தகுதியுடையவர்களிடம் மட்டுமே இதனை பெற முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பலர் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இவர்களிடம் வங்கிகள் உட்பட சில துறைகள், அமைப்புகள் ஆதார் எண் கோருவதாக புகார்கள் வந்துள்ளன. ஆதார் சட்டப்படி, இந்தியர்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும். எனவே, மேற்கண்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரை அவர்களின் உண்மை நிலையை ஆராய்ந்து, அவர்கள் இந்தியர் என்ற வகையில் தகுதிகளை உறுதி செய்து தகவல்களை பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.