20 ஆண்டுகளுக்கு முந்தைய விதிகளை காரணம் காட்டி, பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிடக் கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பாக 2 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்தியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வாதத்தின் போது, 1997ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வகுத்த விதிகளின்படி, அந்தப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட சில காரணங்கள் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டன. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், 20 ஆண்டுகளில் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர். பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டனர். அத்தியூர் திருக்கை கிராம உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.