36 சதவீத கிராமப்புற மாணவ-மாணவியருக்கு நாட்டின் தலைநகர் எதுவென்று தெரியவில்லை. அதேபோல 21 சதவீத மாணவ-மாணவியர்களால் தாங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறோம் என்பதை கூட சொல்லத் தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் மாநிலம் தோறும் எடுக்கப்படும் இந்தியக் கிராமபுறக் கல்வி ஆய்வறிக்கை (ஏசர் சர்வே) 2017 மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் கல்வித்திறன் மிகமிக முக்கியம். எனவே மத்திய, மாநில அரசுகளின் மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்நேரத்தில் கிராமப்புற மாணவர்களிடம் எடுத்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிப்பட்டுள்ளது.
கிராமப்புற இந்தியாவில் மாணவர்களின் கல்வி எந்தநிலையில் இருக்கிறது என்பதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக 24 மாநிலங்களில் உள்ள கிராமப்புற மாணவ- மாணவிகளிடம் இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. 14 முதல் 18 வயது உள்ள மாணவ-மாணவிகளிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், நான்கில் ஒரு மாணவருக்கு தங்களது தாய்மொழியை சரியாக வாசிக்கத் தெரியவில்லை. அதேபோல் கூட்டல், கழித்தல் உள்ளிட்ட எளிய கணக்குகளுக்கு கூட 57 சதவீத மாணவ-மாணவியர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியா வரைபடத்தை காட்டும்போது, 14 சதவீத மாணவர்களுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. 36 சதவீத மாணவ- மாணவியருக்கு நாட்டின் தலைநகர் தெரியவில்லை. 21 சதவீத மாணவ-மாணவியரால் எந்த மாநிலத்தில் வசிக்கிறோம். அது வரைபடத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. 40 சதவீத குழந்தைகள் தங்களுக்கு ரோல் மாடல் என்று யாரும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
ரூபாய் நோட்டுகளை கொடுத்து இதில் எவ்வளவு இருக்கிறது என சொல்லுங்கள் பார்ப்போம் என்றால், 4ல் ஒரு மாணவ-மாணவியர்களுக்கு அதனை சரியாக எண்ணத் தெரியவில்லை. 40 சதவீத குழந்தைகளால் ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிடங்கள என்பதும் தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையை பார்த்து அதிர்ந்துபோன தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நாட்டில் என்னதான் நடக்கிறது..? இதற்கு என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.