ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் சூரியன் மறைந்த பிறகு நிலவின் ஒளியைத்தான் நம்பியிருந்தான். நெருப்பைக் கண்டுபிடித்த பிறகுதான் மனிதனுக்கு இருட்டின் மீது இருந்த பயம் குறையத்தொடங்கியது. இரவில் விலங்குகளை விரட்டவும், வெளிச்சம் தரவும் நெருப்பு பயன்பட்டது. அதன் பிறகு குகை, வீடு என்று வசிப்பிடங்களுக்கு மாறினாலும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் வெளிச்சம் தருவதற்கு பயன்பட்டது விளக்குகள்தாம். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தன.
சாதாரண குண்டுபல்பில் தொடங்கிய மின்சார விளக்கின் வரலாறு ட்யூப் லைட், சோடியம் விளக்குகள், என எல்இடி பல்பு வரைக்கும் வந்து விட்டது. குண்டுபல்புகள் வெப்பத்தை அதிகமாக வெளியிடுகிறது என்றும், புவி வெப்பமடைதலில் இதற்க்கு பங்கு உண்டு எனவும், இந்த பல்புகளை மாற்றினாலே போதும் பெருமளவு மின்சாரத்தை சேமிக்கலாம் எனவும் விளக்குகள் தொடர்பான விவாதங்கள் ஒருபுறம் நடைபெறுகிறது.. குண்டுபல்பு தொடங்கி எல்இடி பல்பு வரை எதுவாக இருந்தாலும் மின்சாரம் என்பது தேவையானதாக இருக்கிறது.
மின் விளக்குகளுக்கு பதிலாக தாவரங்கள்

நம்மைச்சுற்றிதான் அதிகமாக தாவரங்கள் இருக்கிறதே பேசாமல் அவற்றையே ஒளிரச் செய்தால் என்ன என்ற கேள்விக்கு பதிலாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் தாவரங்களை ஒளிரச் செய்யும் தொழில்நுட்பம். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள்தாம் இந்தத் தொழில்நுட்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் பல வருடங்களாகவே நடைபெற்றுக்கொண்டுதானிருந்தன. இறுதியாக அவர்களுக்கு விடை இயற்கையிடம் கிடைத்திருக்கிறது.
இயற்கையாகவே ஒளிரக்கூடிய பொருள்கள் உலகில் பல இருகின்றன. யோசித்துப்பார்த்தால் இப்பொழுது காண்பது அரிதுதான் என்றாலும் பலருக்கு மின்மினிப் பூச்சிகள் ஞாபகத்திற்கு வரக்கூடும். மின்மினிப் பூச்சியின் பின்புறத்தில் ஒளி விட்டுவிட்டு ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.

அது எப்படி ஒளியை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போதுதான் அதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் எனத் தெரிந்தது. இந்த என்சைம்தான் தாவரங்களை ஒளிரச் செய்யவும் பயன்படப்போகிறது.

ஆய்வின்போது லூசிஃபெரேஸ் என்சைம்கள் நானோதுகள்களாக மாற்றப்பட்டு அதனுள்ளே செடிகள் அதிக அழுத்தத்தில் மூழ்கவைக்கப்பட்டன, எனவே என்சைம்கள் இலையின் வழியாக தாவரத்தின் உள்ளே ஊடுருவுகின்றன. உள்ளே சென்ற பின்பு தாவரம் அந்த என்சைம்களுக்கு எதிர்வினையாற்ற தொடங்கும் பொழுது வேறு சில வேதிப்பொருள்களையும் ஒளியையும் உருவாக்குகிறது. இதற்கு முன்பு தாவரங்களின் மரபணுவை மாற்றம் செய்தே இந்த ஆய்வுகள் நடைபெற்றது அதற்கு அதிகமாக் செலவு செய்ய வேண்டியிருந்தது, அதற்கு மாறாக இந்த நானோதொழில்நுட்பத்தில் செலவும் குறைவு; அதிக விலை கொண்ட உபகரணங்களும் தேவைப்படாது.

மேலும் இந்தத் தொழில்நுட்பத்தை எல்லா விதமான தாவரங்களிலும் பயன்படுத்த முடியும்.

"எங்கள் நோக்கம் செடியை முழுமையான மேஜை விளக்காக மாற்றுவதுதான். நிச்சயமாக அதற்கு மின்சாரம் தேவைப்படப்போவதில்லை. செடியில் ஏற்படும் வளர்சிதை மாற்றமே வெளிச்சத்தை உருவாக்கும்" என்கிறார் வேதியல் பொறியியல்துறையைச் சேர்ந்த மைக்கேல் ஸ்ட்ரானோ. தற்பொழுது நீரில் வளரும் அமலைச் செடிகளில் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பொழுது அதன் இலைகள் மூன்று மணி நேரம் ஒளியை உமிழ்ந்திருக்கிறது.

அமலைச் செடிகளில் மட்டுமில்லாது பசலைக் கீரை மற்றும் வேறு சில செடிகளிலும் பரிசோதனை செய்து பார்த்தபொழுது வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது இந்தத் தொழில்நுட்பம். இதை இன்னும் மேம்படுத்தினால் ஒரு நாள் முழுவதும் ஒளியை உமிழச் செய்யவும் பெரிய மரங்களில் கூட அலங்காரத்திற்காக இந்தத் தொழில்நுட்பத்தை தெளிப்பு முறையில் பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பொறியாளர்கள். பாதுகாப்பான பொருள்களையே இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்துவதால் தாவரங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.
எதிர்காலத்தில் மேஜையில் புத்தகம் படிக்கும் பொழுது நமக்கு ஒளி தரப்போவது ஒரு செடியாக இருக்கக்கூடும்.