உயர் கல்வியில் சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் சமீபத்தில் வெளியிட்டார்;
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உயர் கல்விக்கான, ஜி.இ.ஆர்., எனப்படும் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தின் அடிப்படையில், 46.9 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களில், 56.1 சதவீதத்துடன் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.ஜி.இ.ஆர்., விகிதம் என்பது, 18 - 23 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில், உயர் கல்வியில் சேருவதற்கு பதிவு செய்வோரின் சதவீதம்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆண்களின் ஜி.இ.ஆர்., விகிதத்திலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களின், ஜி.இ.ஆர்., விகிதத்தில் சண்டிகர், டில்லிக்கு அடுத்தபடியாக, 45.6 சதவீதத்துடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், ஜி.இ.ஆர்., விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.