ஆனால், வழக்கம் போல் இந்திய வரலாறு தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டது. நமக்கு சொல்லித் தந்த பெண்ணியவாதிகள் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் மறைக்கப்பட்டது மிகப் பெரிய மேட்டுக்குடி துரோகம்...

1831-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் மஹாராஷ்டிராவில் நய்கொன் என்ற ஊரில் பிறந்தார். தனது 9-ஆவது வயதில் மகாத்மா ஜோதிராவ பூலேவின் துணைவி ஆனார். கணவர் தான் அவரின் அடிப்படைக் கல்வி ஆசிரியர். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த அவர், ஆசிரியை ஆனார். பெண்களுக்கான முதல் பள்ளியை 1848-ல் துவங்கினார். பெண்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்கப் பாடுபட்டார்...

இந்த சமூகத்தில் கைவிடப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வி வழங்குதல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதுவும் அந்த 19-ம் நூற்றாண்டில்...

ஒவ்வொரு நாளும் ஆசியர் பணிக்காக செல்லும் வழியில் ஆதிக்க சாதி ஆண்களால் கற்கலாலும், சானியாலும், அழுகிய பொருட்களாலும், கழிவுகளாலும்  தாக்கப்பட்டார். தன் கணவரிடம் இதைப் பற்றி முறையிடவே, அவர் பழைய ஆடையைக் கட்டிக் கொண்டு புதிய ஆடையை கையில் எடுத்து பள்ளிக்குச் சென்று மாற்றி, பள்ளி முடிந்தவுடன் மீண்டும் பழைய ஆடையைக் கட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப் பட்டார்...

கல்விக்காக மட்டுமில்லாமல் இந்தியாவின் முதல் பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் பூலே-வை சொல்லலாம். 1860-ல் விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்று மொட்டை அடிக்கும் தொழிலில் இருந்தவர்களிடம் பேசி இந்த பழக்கத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தினார் .

சத்ய சோதக் சமாஜ்  அமைப்பில் மகளிர் பிரிவு தலைவராக டிசம்பர் 25 - 1873 -ல் பொறுப்பேற்றார். புரோகிதர் இல்லா திருமணத்தை வலியுறுத்தி புரோகிதர் இல்லா திருமணத்தை நடத்தியும் காட்டினார்...

கணவனை இழந்த இளம் பெண்கள் மேட்டுக்குடி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலங்களில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. இந்த பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாகும் பெண்கள் கருவுறும் போது வெளியே தெரிய வந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலைகள் செய்வது வழக்கமாக இருந்தது. இதே போல் பாதிக்கப் பட்ட ஒரு பார்ப்பன பெண்ணைத் தற்கொலையில் இருந்து காப்பாற்றி அந்த பெண்ணின் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைக்கு யஷ்வந்த் என்று பெயரிட்டார்...

உயர் சாதி ஆதிக்க சக்திகளின் கடும் எதிர்ப்பு, கடும் பொருளாதார சவால்களையும் மீறி கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்ட வர்க்களுக்காகவே இல்லம் நடத்துவதை இந்த தம்பதிகள் தங்கள் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டனர்...

1870-ல் மகாராஷ்டிராவில் ஏற்ப்பட்ட கடும் பஞ்சத்தினால் ஏராளமான குழந்தைகள் அனாதை ஆயினர். அவர்களுக்காகவே 52 உறைவிடப் பள்ளிகளை பூலே தம்பதியினர் மிகப் பெரிய சமூக, பொருளாதார சவால்களுக்கு மத்தியில் தொடங்கினர்...

ஜோதிராவ் பூலே 1890-ல் இறந்த போது கட்டுப்பாடுகளை மீறி தன் கணவனின் உடலுக்குத் தானே தீ மூட்டினார். 1893-ம் ஆண்டு சாஸ்வத் என்ற இடத்தில் சமாஜத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.1896-ல் பஞ்ச நிவாரணப் பணிக்கு பிரிட்டிஷ் அரசை நிர்பந்தித்து வெற்றியும் காண்கிறார்...

1897-ல் கொடிய பிளேக் நோய் புனே நகரைத் தாக்கியது. நேரடி நிவாரணப் பணியில் ஈடுபட்ட அவரை பிளேக் நோய் தாக்கி 1897 மார்ச் 10-ல் மறைந்தார்...

சமூக விடுதலையைப் பற்றி நினைத்தும் கூடப் பார்க்க முடியாத 19-ம் நூற்றாண்டில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு , பெண் கல்வி, விதவை மறுமணம், புரோகிதர் இல்லாத் திருமணம், தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை எனத்  தன் மொத்த வாழ் நாளையும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இந்த சமூகத்திற்காகவே செலவிட்ட இவர்தான் உண்மையான இரும்புப் பெண் என்று போற்றப்படக் கூடியவர்...

பழைய மதச் சங்கிலிகளை உடைத்து மனித நேயப் பாதைக்கு வித்திட்ட சாவித்ரி பாய் பூலே இந்திய வரலாறுகளில் மறைக்கப்பட்டதர்க்குக் காரணம், இந்திய வரலாறு என்பது மேட்டுக்குடி வர்க்கத்தினரால் உருவகப்படுத்துவதே ஆகும்...

ஆனால் உண்மைகள் ஒரு போதும் ஓய்வெடுப்பதில்லை.