குமரி மாவட்டத்தில் பிப்ரவரி 13-ம் தேதி சிவாலய ஓட்டம் தொடங்குவதால், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்து உள்ளார்.
மகா சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்தில், பக்தர்கள் 12 சிவ ஆலயங்களுக்கு நடந்தும், ஓடியும் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குமரி மாவட்டத்தில் கேரள மாநிலப் பகுதியை ஒட்டியிருக்கும் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ள திருமலை அருள்மிகு மகாதேவர் கோவிலில் தொடங்கும் இந்த சிவாலய ஓட்டமானது, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலான்கோடு, திருவிடைகோடு, திருவிதாங்கோடு, திருபன்னிக்கோடு, திருநட்டாலம் என பன்னிரண்டு ஆலயங்களுக்கு பக்தர்கள் செல்வார்கள்.
சுமார் 112 கி.மீ தூரம் கொண்ட இந்த சிவாலய ஓட்டம், குமரி மாவட்ட பக்தர்களால் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், குமரி மாவட்டத்தைச் சேர்ர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்களும், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். அதனால் கோயில்களுக்குச் செல்லும் வழிகளில் மின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
அத்துடன், சிவாலய ஓட்டத்தையொட்டி குமரி மாவட்டத்துக்கு பிப்ரவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''மகா சிவராத்திரி ஓட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி (செவ்வாய் கிழமை) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக மார்ச் 10-ம் தேதி சனிக்கிழமை, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக இருக்கும்.
அத்துடன், பிபரவர் 13-ம் தேதி குமரி மாவட்டத்தில், தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிவாலய ஓட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டுள்ளது.