தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் அதில் தமிழ் மொழி மிகப்பழமையானது என்றும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது
ஜெர்மனியை சேர்ந்த மாக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனம் டேராடூன் இந்தியா வன உயிர்க் கல்வி நிலையம் ஆகியவை இணந்து மொழி ஆய்வு ஒன்றை நிகழ்த்தியது. இதில் மொழிகளின் தொன்மை பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில், "தெற்கு ஆசியாவில் 600 மொழிகள் இருந்துள்ளன. அம்மொழிகள் திராவிடம், இந்தோ- ஐரோப்பா, சீனா-திபெத் உள்ளிட்ட ஆறு மொழிக் குடும்பங்கலாக வகைப்படுத்தப்பட்டன. இந்த அடிப்படையில் அனைத்து மொழிக் குடும்பங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வில் திராவிட மொழிக் குடும்பமே மிகவும் பழமை வாய்ந்தது. இக்குடும்பம் சுமார் 4500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 82 மொழிகள் இருந்துள்ளன. இம்மொழிக் குடும்பத்தில் மிகப்பழமையான மொழி தமிழ் மொழி ஆகும்.
தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும் காப்பியங்களும் இன்று வரை காணக் கிடைப்பதினால் சமஸ்கிருதம் போல தமிழ் மொழி சிதையாமல் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.