வேலூர்: நாடு முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என்ற 2திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நாட்டின் கற்றவர் சதவீதத்தை உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்து, ‘சமந்த்ரா சிக்‌ஷா அபியான்’ என்ற ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தற்போது உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக இருக்கும் வகையில் புதிய பள்ளிகள் தொடங்கப்படும், அல்லது இருக்கின்ற பள்ளிகள் இணைக்கப்படும். இவ்வாறு தொடங்கப்படும் பள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்க முடியும். யாருக்கும் சீட் இல்லை என்ற மறுப்பும் இருக்காது.
முதல்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் மிகவும் பின்தங்கிய ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு இப்பள்ளிகள் தொடங்கப்படும். 

தமிழகத்தில் உள்ள 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும் பின்தங்கிய 75 ஒன்றியங்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு இப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடங்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து மே 5ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இதுதொடர்பான அறிக்கையை தயார் செய்யும்படி அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது