உயர் கல்வித் துறைக்குக் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக ரூ. 940 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
சேலம் அரசு கலைக் கல்லூரியின் 140-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் உள்கட்டமைப்பு கட்டடங்களைத் திறந்து வைத்தும், மாணவ, மாணவியருக்கு கல்வி நலத் திட்ட உதவிகள் மற்றும் பேராசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியும் அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியது:
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி ஆய்வு குறித்த அறிக்கையில், தமிழகம் உயர் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
இந்தக் கல்வியாண்டில் கூட கணக்கெடுத்துப் பார்த்தால் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 27,205 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 58 பல்கலைக்கழகங்கள், 2,368 கல்லூரிகள் உள்ளன. உயர்கல்வி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு கடந்த 6 ஆண்டுகளில் மட்டுமே 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆக மொத்தம் 65 புதிய கல்லூரிகளைத் தொடங்கி சிறப்பு சேர்த்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆவார். மேலும், நிகழாண்டு 11 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அடுக்கடுக்காக புதிய கல்லூரிகளைத் தொடங்கியதன் காரணமாக உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்திலும் தமிழகம் உயர்வான நிலையைப் பெற்றுள்ளது. மாணவர் சேர்க்கை விகிதம் இந்திய அளவில் சராசரியாக 25.2 சதவீதமாகும். தமிழகம் 46.9 சதவீதத்தை எட்டி முதன்மை நிலையைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் பெண்களின் மாணவர் சேர்க்கை விகிதம் 24.5 சதவீதம். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 45.6சதவீதமாக உள்ளது. இந்த உயர்வான நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
2018- 19 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உயர்கல்விக்கென ரூ. 4,620 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 940 கோடி கூடுதலான ஒதுக்கீடு ஆகும்.
சேலம் அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லூரியாகவும் 162 வருட பாரம்பரியமிக்க கல்லூரியாகவும் திகழ்கிறது. தற்போது இக் கல்லூரியில், 19 இளங்கலை பட்டப் படிப்பு வகுப்புகள், 18 முதுகலை பட்டமேற்படிப்பு வகுப்புகள், 12 ஆய்வியல் நிறைஞர் வகுப்புகள், 12 முனைவர் பட்ட ஆய்வுத் துறைகள் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.
இக் கல்லூரியில் தற்போது 5,334 மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.
கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் மூலமாக 2017-18 கல்வியாண்டில் ரூ. 50 லட்சம் செலவில் ஐந்து வகுப்றைகளுக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பெற்று அப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவாக ரூ. 2.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, எட்டு வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகங்களும் கட்டப்பட உள்ளன என்றார்.
ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமை வகித்தார். சேலம் எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்எல்ஏ-க்கள் ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன், சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மா.சகுந்தலா, தமிழ் துறை தலைவர் எஸ்.குணசேகரன், இணை பேராசிரியர் ஜி.வெங்கேடசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.