புதுடில்லி : 'பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு, 'ஆதார்' கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், ஊழலில் திளைக்கும் அரசு உயரதிகாரிகளின் முறைகேடான சொத்துகளை கண்டறிய, ஆதாரை பயன்படுத்த முடியும்' என, சி.வி.சி., எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.


ஆதார்,Aadhaar,ஊழல் அதிகாரிகள்,சொத்துகள்,கண்காணிப்பு ஆணையம்,அதிரடி,முடிவு


நாடு முழுவதும், 100 கோடி பேருக்கு மேல், ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; இதில், தனி நபர்களின், கைரேகை, கருவிழி உள்ளிட்ட, 'பயோமெட்ரிக்' தகவல்கள் இடம்பெற்று உள்ளன. ஒரே நபர், பல்வேறு பெயர்களில், அரசின் நலத்திட்ட பயன்களை பெறுவது தடுக்கப்படுகிறது.


செயல் திட்டம்:


மொபைல் போன் இணைப்பு, சமையல், 'காஸ்' மானியம், வங்கி கணக்கு, இன்சூரன்ஸ், வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றுடன், ஆதாரை இணைக்கும்படி, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆதார் அட்டையால், தனி நபர் ரகசியம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக, பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்நிலையில், சி.வி.சி., எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையர், கே.வி.சவுத்ரி, டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு, பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உள்ளது; இது, சிறந்த பலனை அளித்து வருகிறது.

அதேபோல், ஊழலில் திளைக்கும் அரசு உயரதிகாரிகளின் சொத்துகள், முறைகேடான வகையில் சேர்க்கப்பட்டதா என்பதை, ஆதார் உதவியுடன் அறிய முடியும்.

'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் தகவல்களை வைத்து, சம்பந்தப்பட்ட கார்டுதாரரின் வருவாயை வைத்து, குறிப்பிட்ட ஒரு நிதி பரிவர்த்தனையை அவர் மேற்கொண்டாரா என்பதை கண்டறியமுடியும். இதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது; இதை அமல்படுத்த, அதற்கான மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு நபர் மீது சந்தேகம் எழும் பட்சத்தில், மென்பொருள் மற்றும் ஆதார் உதவியுடன், அரசின் பல்வேறு துறைகள் மூலம், அந்த நபர் குறித்த தகவல்களை பெறலாம்.


நடவடிக்கை:


அசையா சொத்துகள், நிறுவன பங்குகள் ஆகியவற்றை வாங்கியது குறித்த தகவல்கள், வருமான வரித்துறை, பதிவுத் துறை, நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அரசு ஏஜன்சிகளின் இணையதளங்களில் எளிதில் பெற முடியும். குறிப்பிட்ட சில நிதி பரிவர்த்தனைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கினால், ஒருங்கிணைக்கப்பட்ட சில ஏஜன்சிகளிடம் தகவல்களை, சி.வி.சி., பெற்றுக் கொள்ள முடியும்.

இத்தகவல்களை வைத்து, வருவாய்க்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரிப்பது எளிதாகும். இத்தகைய தகவல்கள், சி.வி.சி., - சி.பி.ஐ., போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கு, இதுவரை கிடைப்பதில் சிரமம் உள்ளது. பிரதமர், நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி, ஊழலை எல்லா துறையிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சி.வி.சி., உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தவறை அறியலாம்!
ஆதார் தகவல்களை, மற்றவர்கள் தவறாக பயன்படுத்துவதாக, தற்போது புகார் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை போக்குவதற்கான வசதி, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது; இதன்படி, ஆதார் அடையாள அட்டை ஆணைய இணையதளம், யு.ஐ.டி.ஏ.ஐ., மூலம், நம் ஆதார் அடையாள அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை, அறிந்து கொள்ள முடியும். அதுபற்றிய விபரம்: ஆதார் இணையதளத்தில், ஆதார், சரிபார்ப்புகள் நிகழ்ந்ததை காட்டும் பக்கம், https://resident.uidai.gov.in/notification-aadhaar செல்லவும். அதில், ஆதார் அடையாள எண்ணையும், அந்த பக்கத்தில் உள்ள படத்தில் இடம்பெற்றுள்ள, 'செக்யூரிட்டி கோடையும் டைப்' செய்யவும். பின், 'ஜெனரேட், ஓ.டி.பி' என்பதை, 'கிளிக்' செய்யவும். இதையடுத்து, உங்கள் மொபைல் போனுக்கு, ஒரு எண் வரும். இதன்பின், எந்த காலத்தில், ஆதார் பயன் படுத்தியதற்கான நிகழ்வுகளை சோதிக்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். பின், உங்கள் மொபைல் போனுக்கு வந்த, ஓ.டி.பி., எண்ணை டைப் செய்யவும். இதைத் தொடர்ந்து, ஆதார் சரிபார்ப்பு வேண்டுகோள்கள் நிகழ்ந்த தேதி, நேரம், வகைகள் குறித்த தகவல்கள் திரையில் தோன்றும். அதே சமயம், இந்த வேண்டுகோளை விடுத்தது யார் என்பதை பார்க்க முடியாது. இந்த வேண்டுகோள்களில், ஏதாவது சந்தேகம் இருந்தால், உங்களின் ஆதார் தகவல், இணையதளத்தில் தெரியாத வகையில், 'லாக்' செய்து வைக்கலாம். தேவைப்படும்போது, மீண்டும் திறந்து, பயன்படுத்திக் கொள்ளலாம்.