திண்டுக்கல்: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டம் நடத்த 'ஜாக்டோ' உயர் மட்டக் குழு முடிவு செய்துள்ளது.பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன், துணை தலைவர் அய்யாகண்ணு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் கூறியதாவது:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகை வழங்கவும், 2004-2006ல் நியமித்த தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி முறைப்படுத்தவும் வலியுறுத்தி மாவட்ட, மாநில தலைநகரங்களில் மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை.நேற்று முன்தினம் திருச்சியில் நடந்த 'ஜாக்டோ' உயர்மட்ட குழுவில் கோரிக்கை நிறைவேறாததை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள 79 விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன் மறியல் நடத்துவது என்றும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியினை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம், என்றனர்.கூட்டத்தில் தமிழக தமிழாசிரியர் கழக சிறப்பு தலைவர் ஆறுமுகம்,தலைமையாசிரியர் கழக தலைவர் பீட்டர்ராஜா, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 'விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடாத தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மறியலில் ஈடுபடுவார்கள், என தெரிவித்தார்.