பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 8 -ஆம் தேதி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதற்கான மனுவை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அலுவலகத்தில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் வியாழக்கிழமை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சி.பி.எஸ். எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இல்லாவிட்டால், வரும் 8 -ஆம் தேதி தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.