அண்ணா பல்கலை நடத்தும், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நேற்று துவங்கியது. முதல் நாளில், 7,420 மாணவர்கள், விண்ணப்பம் பதிவு செய்தனர்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. ஜூலையில் நடக்க உள்ள, இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்புவோருக்கு, நேற்று முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.இதில், முதல் விண்ணப்பமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:15 மணிக்கு, ரோஷன் என்ற மாணவர்பதிவு செய்துள்ளார். நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, 7,420 பேர் பதிவு செய்திருந்தனர்.இவர்களில், 6,370 பேர், வீடு மற்றும் பெற்றோரின் அலுவலகங்களில் இருந்து, பதிவு செய்துள்ளனர். 1,050 பேர் மட்டுமே, அரசின் உதவி மையங்கள் வழியாக, பதிவு செய்துள்ளனர்.ஆன்லைனில் பதிவு செய்வது சிரமம் என கூறப்பட்ட நிலையில், பெரும்பாலான மாணவர்கள், உதவி மையங்களுக்கே வராமல், தங்கள் இருப்பிடத்தில் இருந்தே, உற்சாகமாக பதிவு செய்துள்ளனர். சென்னை, அண்ணாபல்கலையில் உள்ள, உதவி மையத்தை, உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா, பதிவாளர் கணேசன், மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் ரைமண்ட் உத்தரியராஜ்ஆகியோர் பார்வையிட்டனர். வழிமுறைகள் என்ன? 'ஆன்லைன்' பதிவுக்கு, என்னென்ன விபரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டிசெயலர், ரைமண்ட்உத்தரியராஜ் கூறியதாவது:* வரும், 30ம் தேதி வரை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். மாநிலம் முழுவதும் உள்ள, 42 உதவி மையங்களில், காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை பதிவு செய்யப்படும். வீடுகளில், கணினிகளில் பதிவு செய்வோர், 24 மணி நேரமும், எப்போதும் பதிவு செய்யலாம்* பதிவுக்கு முன், https://tnea.ac.in என்ற, இணையதளத்தில் உள்ள, தகவல் விண்ணப்பத்தை பார்த்து, அதில் உள்ள விபரங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டால், எளிதில் பதிவை மேற்கொள்ளலாம். உதவி மைய முகவரியும், இணைய தளத்தில் உள்ளது. ஆன்லைனில் பதிவு செய்வதற்கான மாதிரி வடிவமும், இணையதளத்தில் உள்ளது. பதிவு செய்யும் முன், மாணவரோ, அவரது பெற்றோரோ, இந்த நடைமுறைகளை பார்த்துக் கொள்ளவும்* 'ஆதார்' எண், பிளஸ் 2 தேர்வு பதிவு எண், பாடப்பிரிவின் எண், பள்ளியின் பெயர், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மாணவரின் சுயவிபரங்களை, தயாராக வைத்திருக்க வேண்டும். மாணவரின் மதிப்பெண்ணை பதிவு செய்ய, தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டாம். அவரவர் தேர்வு பதிவு எண்ணை வைத்து, தேர்வு முடிவு வந்ததும், அண்ணா பல்கலையே, மதிப்பெண்களை பதிவு செய்து கொள்ளும்* பதிவுக்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை மட்டும் பயன்படும் உள்ளீட்டு எண் தேவைப்படும் என்பதால், மொபைல் போன் வேண்டும். மாணவரின் மொபைல் எண்ணோ, பெற்றோரின் எண்ணோ கொடுக்கலாம். அதில் தான், கவுன்சிலிங் தொடர்பான தகவல்கள், எஸ்.எம்.எஸ்., செய்தியாக வரும்* அதேபோல, இ - மெயில் முகவரி கட்டாயம் தேவை. இல்லாதவர்கள், இ - மெயில் முகவரி உருவாக்கிக் கொள்ளவும், உதவி மையத்தில் வசதிகள் உள்ளன. இ - மெயிலில், அவ்வப்போது தகவல்கள் அனுப்பப்படும்* தற்போதைய ஆன்லைன் பதிவுக்கு, எந்த சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதில் புகைப்படத்தை இணைத்து, சான்றிதழ்களின் நகல்களுடன் தயாராக வைத்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கும் போது, உதவி மையத்துக்கு, சான்றிதழ் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்* விண்ணப்ப கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த, 'ஏ.டி.எம்., டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு' தயாராக வைத்திருக்க வேண்டும். அந்த வங்கியின், ஓ.டி.பி., எண் வரும் என்பதால், மொபைல் போனையும் கையில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 'சபாஷ்' அமைச்சர்! உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், சென்னை, அண்ணா பல்கலை உதவி மையத்தை, நேற்று பார்வையிட்டார். ஏற்பாடுகள் குறித்து, மாணவர்களிடமும், பெற்றோரிடமும் விசாரித்தார். அப்போது, ஒரு மாணவனுக்காக, அவரது தந்தை கணினியில் பதிவு செய்து கொண்டிருந்தார்.அவரது பதிவை, அமைச்சர் பார்வையிட்டபோது, மாணவன் தேர்ச்சி பெற்ற ஆண்டு, பிழையாக பதிவு செய்திருப்பதை கண்டுபிடித்தார். அதாவது, 2014, 2015, 2016, 2017 என்பதற்கு பதில், 2004, 2005, 2006, 2007 என, பதிவு செய்திருந்தார். இதை அமைச்சர் சுட்டிக் காட்டியதும், மாணவரின் தந்தை, பிழையை சரி செய்து, சரியான ஆண்டை பதிந்தார்; அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்