


சென்னை: தமிழ் மொழி பேசுவோர் எண்ணிக்கை சதவீதம் என்பது படிப்படியாக குறைந்து கொண்டு வருவதை மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரம் அம்பலப்படுத்தியுள்ளது.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதில் மொழிவாரி பிரிவுகளும் அடங்கும். இதன்படி இந்தியாவிலேயே ஹிந்தி பேசும் மக்கள் மிக அதிகமாகும். ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 43.63 சதவீதம் என தெரியவந்துள்ளது.
5வது இடத்தில் தமிழ்
2வது இடத்தை வங்களாமும், 3வது இடத்தை மராத்தியும், 4வது இடத்தை தெலுங்கும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் 5வது இடம் தமிழாகும். குழந்தை பருவம் முதல் வீட்டிலேயே எந்த மொழி பேசுகிறார்களோ, ஒருவரின் தாய்க்கு எந்த மொழியோ அதை வைத்தே தாய் மொழியை கணக்கிடுகிறார்கள் புள்ளி விவர கணக்கெடுப்பாளர்கள்.
தமிழர்கள் எண்ணிக்கை
இதன்படி, 1971ம் ஆண்டு புள்ளி விவரப்படி, தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் எண்ணிக்கை 3,76,90,106 கோடியாகும். 1991ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 5,30,06,368 பேர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்களாகும். 2001ம் ஆண்டு இது 6,07,93,814 கோடியாகவும், 2011ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 6,90,26,881 ஆகவும் உயர்ந்தது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தமிழ் பேசுவோர் எத்தனை பேர் என்பதை வைத்து சதவீதம் கணக்கிடப்படுகிறது. அப்படி பார்த்தால், 1971ம் ஆண்டு, தமிழர்கள் 6.88 சதவீதமாகவும், 1991ல் 6.32 சதவீதமாகவும், 2001ல் 5.91 சதவீதமாகவும் இருந்த தமிழர்கள் எண்ணிக்கை, இப்போது மேலும் குறைந்து 2011ம் ஆண்டில், 5.70 சதவீதமாக உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம், வங்க மொழி, மராத்தி, தெலுங்கு ஆகிய முறையே 2வது முதல் 4வது வரையிலான மொழிகள் பேசும் மக்கள் தொகை 2001ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2011ல் தமிழை போலவே சற்று குறைந்துள்ளது. ஆனால், ஹிந்தியை தாய் மொழியாக கொண்டோர் மட்டும் அதிகரித்துள்ளனர். அதுவும் 2.6 சதவீதம் அதிகரித்துள்ளனர்.

1991ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2001ம் ஆண்டு, 2011ம் ஆண்டுகளில் தமிழ் பேசுவோர் சதவீதம் குறைந்துள்ளது. மற்ற மொழிகளின் நிலையும் இதுவே. ஆனால் ஹிந்தியை தாய் மொழியாக கொண்டோர் எண்ணிக்கை 1991ஐவிட, 2001, அதைவிட 2011 என, தொடர்ச்சியாக அதிகரித்தபடிதான் உள்ளது. இதற்கு ஹிந்தி பேசும் மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகள் இன்னும் அதிகம் சென்று சேரவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..