சென்னை : ''மாவட்ட நுாலகங்களில், ஒரு மாதத்திற்குள், ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமி துவக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - சுப்ரமணி: தர்மபுரி சட்டசபை தொகுதி, கோணங்கி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, சி.புதுார் கிராமத்தில் உள்ள, நுாலகத்திற்கு கட்டடம் கட்ட, அரசு முன்வருமா?அமைச்சர், செங்கோட்டையன்: அங்கு நுாலகம் இல்லை.சுப்ரமணி: இரண்டு ஆண்டுகளுக்கு முன், நுாலகம் துவக்கப்பட்டு, வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தி.மு.க., ஆட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமங்களில் நுாலகங்கள் அமைக்கப்பட்டன. அவை, தற்போது செயல்படாமல் உள்ளன. அவற்றை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர், செங்கோட்டையன்: அந்த ஊரில், அரசு நுாலகம் இல்லை என, தகவல் வந்துள்ளது. எனினும், ஆய்வு செய்யப்படும். நுாலகங்களை, கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி நடந்து வருகிறது.

மாவட்ட நுாலகங்களில், ஒரு மாதத்திற்குள், ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமி துவக்கப்படும்.தி.மு.க., - மகேஷ் பொய்யாமொழி: திருவெறும்பூர் தொகுதியில், 70 ஆண்டுகள் பழமையான நுாலகம் உள்ளது. அங்கு, 24 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.அவற்றில், 5,000 புத்தகங்கள், மழையில் சேதமடைந்துள்ளன; அவற்றை பாதுகாக்க வேண்டும். உள்ளாட்சி நிதியில், நுாலகத்திற்கு ஒதுக்கப்படும் தொகையை, முறையாக செலவிட வேண்டும்.அமைச்சர், செங்கோட்டையன்: உள்ளாட்சி சார்பில், நுாலகத்திற்கான நிதியில், நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில், நுாலகங்கள் பராமரிக்கப்படும்.தி.மு.க., - மஸ்தான்: செஞ்சி நுாலகத்திற்கு கட்டடம் கட்டித் தர வேண்டும்.அமைச்சர்: நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - பிச்சாண்டி: கிராமங்களில் மூடப்பட்ட, அண்ணா நுாலகங்களை திறக்க வேண்டும்.

நுாலகங்களில், உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, விளம்பரப்படுத்த வேண்டும்.அமைச்சர், செங்கோட்டையன்: இந்த ஆண்டு, 3.50 லட்சம் வாசகர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, 1.17 லட்சம் வாசகர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்ணா பெயரிலான நுாலகங்களை திறக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.