கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
இயற்கை மனிதர்களை தாக்கும்
விரைவில் இந்த பூமி வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்றும், இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். சர்வதேச பருவநிலை ஆய்வாளர்கள் குழு, பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து ஒரு சஞ்சிகையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள், இப்போது நம்மை காப்பாற்றிவரும் சில இயற்கை வளங்கள், உயரும் வெப்பத்தால் நமக்கு எதிரியாக மாறும். இப்போது கார்பனை உள்வாங்கும் அமேசான் மழைக்காடுகள் ஒரு கட்டத்தில் கார்பனை உமில தொடங்கும். கடல் உயரம் 10 முதல் 60 மீட்டர் வரை உயரும். இதனால் பல பகுதிகள் இந்த புவியில் வாழத் தகுதியற்றதாக மாறும் என்று எச்சரித்து உள்ளனர். புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், காடுகளை காப்பது, அதிக அளவிலான மரங்களை நடுவது, மற்றும் குறிப்பாக பூமியுடனான நம் உறவை சீர் செய்து கொள்வது மூலமாக எதிர்வரும் அபாயத்திலிருந்து தப்பலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஸ்டாக்ஹோம் ரெசிலியன்ஸ் நடுவம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பத்தினால் ஏற்படும் அனல் காற்றினால் ஐரோப்பிய மக்கள் தவித்து வருகிறார்கள். பிரான்ஸ், ஜெர்மன், ஸ்பெயின் என பல ஐரோப்பிய தேசங்களில் வெப்ப அளவு அதிகரித்து வருகிறது. ஜெர்மனிலும் ஒருவரும், ஸ்பெயினில் ஏழு பேரும் வெப்பத்தின் காரணமாக பலி ஆகி உள்ளனர் என்கிறது ஏ.எஃப்.பி செய்தி முகமை. வானிலை நிபுணர்கள் இனி வரும் நாட்களில் வெப்பம் மெல்ல குறையலாம் என்று நம்பிக்கை தருகின்றனர்.