உலகின் மிகப் பெரிய யானை பறவைகளை கொன்றது யார்?


படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதுவரை உலகில் வாழ்ந்த மிகப் பெரிய பறவையை வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் அழித்தனரா என்ற கேள்வியை மடகாஸ்கரில் புதைபடிவ நிலையில் கண்டறியப்பட்டுள்ள அவற்றின் எலும்புகள் எழுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மடகாஸ்கரில் வாழ்ந்த யானைப் பறவைகள் வரலாற்று முந்தைய மனிதர்களால் உணவுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது கிடைத்துள்ள இந்தப் பறவையின் எலும்புகள், சுமார் 10,000 வருடங்களுக்கு முந்தியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் கண்டறியப்படுவதற்கு முன்புவரை மனிதர்கள் இத்தீவுக்கு சுமார் 2,500 முதல் 4,000 வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
"இந்த ஆதாரங்கள் தற்போது இத்தீவில் மனிதர்களின் வருகை மேலும் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்கும் எனக் கருத வைத்துள்ளது" என்று லண்டன் விலங்கியல் சங்கத்தை சேர்ந்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்ஸ்போர்ட் தெரிவித்துள்ளார்.
படத்தின் காப்புரிமைZOOLOGICAL SOCIETY OF LONDON
அதுமட்டுமில்லாமல் மனிதர்களின் வரலாறு குறித்து இது கேள்விகளை எழுப்புவதாகவும், மடகாஸ்கரின் தனித்துவமான உயிரிகளின் அழிவு குறித்து தெரிந்துகொள்ள முற்றிலும் வேறுபட்ட அழிவு கோட்பாடு" தேவைப்படுகிறது.
குறுகிய காலத்தில் இவற்றை மொத்தமாக அழித்துவிடாமல், அவை சுமார் 1,000 வருடங்களுக்கு முன்னர் அழியும் வரை மனிதர்கள் அவற்றோடு பல்லாயிரம் ஆண்டுகள் இணைந்து வாழ்ந்ததாகத் தெரிகிறது.
"யானைப் பறவைகள் மற்றும் தற்போது அழிந்துவிட்ட பிற விலங்கினங்களோடு மனிதர்கள் 9,000 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருப்பதாகத் தெரிகிறது" என்று ஹன்ஸ்போர்டு மேலும் கூறுகிறார்.
ஒருகாலத்தில் யானைப் பறவைகள் மடகாஸ்கரில் எங்குபார்த்தாலும் காணப்பட்டது.
படத்தின் காப்புரிமைZOOLOGICAL SOCIETY LONDON
சுமார் 500 கிலோ எடையும், மூன்று மீட்டர் உயரமும் கொண்டிருந்த யானை பறவைகளின் முட்டைகள் டைனோசர்களின் முட்டையை விட பெரியதாக இருந்தன.
ஏப்யோர்னிஸ், முல்லேரோர்னிஸ் ஆகிய யானைப் பறவைகள் அதே காலத்தில் வாழ்ந்து பிறகு அழிந்துபோன அற்புதமான விலங்கினமான லெமூர்களுடன் மடகாஸ்கரில் உலாவின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பறவைகள் எப்படி, எதற்காக கொல்லப்பட்டன, அதில் எவ்வளவு மனிதர்கள் ஈடுபட்டார்கள் என்பது குறித்து பல கோட்பாடுகள் உள்ளன.
படத்தின் காப்புரிமைSPL
வெப்பமண்டல தீவான மடகாஸ்கரில் மனிதர்கள் வாழத்தொடங்கியது குறித்து இதற்கு முந்தைய கருத்துகளை இந்த ஆராய்ச்சி புரட்டிப்போட்டுள்ளது.
"இதுசார்ந்த மேலதிக தொல்பொருள் ஆதாரங்களை நாங்கள் திரட்டும்வரை இந்த பறவைகளை அழித்த மனிதர்கள் குறித்த தகவல் தெரியவராது" என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சக ஆராய்ச்சியாளரான ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக பேராசிரியர் பாட்ரிசியா ரைட் கூறுகிறார்.
"யார் அந்த மனிதர்கள்? அவர்கள் எப்போது, எந்த காரணத்தினால் மறைந்தார்கள் என்ற கேள்விகளுக்கான விடைகள் இன்னும் தெரியவரவில்லை."