
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தால் முழு ஊதியமும் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மாற்றுத்திறனாளிகள் வேலை உறுதித் திட்டத்தில் 4 மணி நேரம் வேலை செய்தாலே அவர்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்குதல், குழந்தைகளை பராமரித்தல், பணித்தளத்தில் இலை, தழைகள் மற்றும் சிறு மரங்களை அகற்றுதல், ஆழப்படுத்தப்படும் இடங்களில் தண்ணீர் தெளித்தல், கரைகளை சமன்படுத்துதல், முட்புதர்களை அகற்றுதல், மரக்கன்று நடுதல் போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
எனவே மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு தனி நபர் வேலை அடையாள அட்டையை பெற்று கொள்ளவும்.
இதன் மூலம் 4 மணி நேரம் வேலை செய்து முழு ஊதியத்தையும் பெற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 1800- 4252187 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.