இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையை தடை
செய்யமுடியாது என்று அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளியின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம் அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
குறைவாக மாசுபடுத்தும் மேம்படுத்தப்பட்ட நவீன வகை பட்டாசுகளை ('பசுமை பட்டாசு') மட்டுமே இனிமேல் தயாரிக்க வேண்டும். என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டால், அந்த இடத்தின் காவல் நிலைய அதிகாரி பொறுப்பாக்கப்படுவார், பிறகு அவர்மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதி ஏ.கே சிக்ரி மற்றும் நீதிபதி அஷோக் பூஷண் அடங்கிய நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
சரி, உச்ச நீதிமன்றம் கூறிய பசுமை பட்டாசு என்றால் என்ன? பாரம்பரிய வகை பட்டாசுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விகள் எழுகிறது.
'பசுமை பட்டாசு' என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 'நீரி'யின் (NEERI) கண்டுபிடிப்பு. இது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் அரசு நிறுவனம். பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும் பசுமை பட்டாசு, வெடிக்கும்போது குறைவாகவே மாசுபடுத்தும்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், ஜனவரி மாதத்தில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பாக பேசினார். அதன்பிறகு, அவரது அறிவுறுத்தலின் பேரில் பசுமை பட்டாசு பற்றிய ஆராய்ச்சிகளை 'நீரி' தொடங்கியது.

பசுமை பட்டாசு என்பது எப்படி இருக்கும்?
பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும். வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும்.
சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50% குறைவான நச்சு வாயுவை வெளியிடும்.
"பசுமை பட்டாசுகள், சாதாரண பட்டாசுகள் வெளியிடுவதை விட சுமார் 40-50% வரை குறைவாகவே மாசை வெளியிடும். ஆனால், முற்றிலும் பாதுகாப்பானது என்றோ, பாதிப்பே ஏற்படுத்தாதவை என்றோ கூறிவிடமுடியாது" என்று கூறுகிறார் 'நீரி'யின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சாதனா.
வழக்கமான பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியேறும் நைட்ரஜன் மறும் கந்தக வாயுக்களை எப்படி குறைப்பது என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார்.
இந்த புதிய ரக பட்டாசுகளை வெடித்தாலும் நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்கள் வெளியேறும். பசுமை பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை. அதற்கான புதிய ரசாயன சேர்க்கை சூத்திரத்தை 'நீரி' உருவாக்கியுள்ளது.

மாசு அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டு தீபாவளியின்போது தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது
பசுமை பட்டாசுகளில் எத்தனை வகைகள் உள்ளன?
'நீரி' தயாரித்திருக்கும் சூத்திரத்தின் படி தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்துவிடும் என்றும் கூறுகிறார் டாக்டர் சாதனா.
பாரம்பரிய பட்டாசுகளில் இருந்து மாறுபட்ட பசுமை பட்டாசுகளை 'நீரி' நான்கு வைகைகளில் தயாரித்துள்ளதாக டாக்டர் சாதனா கூறுகிறார்.
  1. தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்: இந்த வகை பசுமை பட்டாசுகள் வெடித்த பிறகு கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக உருமாறிவிடும். அதில் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்துவிடும். இந்த வகை பட்டாசுக்கு 'வாட்டர் ரிலீசர்' என்று 'நீரி' பெயரிட்டுள்ளது. மாசை குறைக்கும் முக்கியமான காரணியாக தண்ணீர் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் பல இடங்களில் மாசு அளவு அதிகரித்திருந்த சமயத்தில் மாசு அளவை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் தெளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
  2. கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களை குறைவாக வெளியிடுகிறவைஇந்த வகை பசுமை பட்டாசுகளுக்கு STAR பசுமை பட்டாசு என்று'நீரி' பெயரிட்டுள்ளது. அதாவது Safe thermite cracker என்பதன் சுருக்கமாக STAR என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசில், ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் (Oxidizing Agent) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பசுமை பட்டாசுகளை வெடிக்கும்போது, கந்தகம் மற்றும் நைட்ரஜன் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு சிறப்பு வகை வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.
  3. அலுமினியம் குறைவாக பயன்படுத்தப்படுகிறவைசாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது இந்த வகை பட்டாசில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு SAFAL (Safe Minimal Aluminum) என்ற பெயரிடப்பட்டுள்ளது.
  4. அரோமா பட்டாசு: இந்த வகை பட்டாசுகளை வெடிக்கும்போது தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணமும் வெளியாகும்.
பசுமை பட்டாசுகள் எங்கே கிடைக்கும்?
தற்போது பசுமை பட்டாசுகள் இந்திய சந்தையில் கிடைப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. 'நீரி'யின் கண்டுபிடிப்பான பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சற்று காலம் பிடிக்கும்.
சந்தையில் விற்பனைக்காக தயாரிப்பதற்கு முன்னர், இந்த பசுமை பட்டாசுகளின் தரம் மற்றும் மாசு குறைவு போன்ற அம்சங்களை அரசிடம் நிரூபித்து சான்றிதழ் வாங்கவேண்டும். அதன் பிறகுதான் விற்பனைக்கான அனுமதி கிடைக்கும்.
தற்போது இந்தியச் சந்தையில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் மட்டுமே கிடைக்கின்றன. இருந்தாலும், பல்வேறு ரசாயன சேர்க்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு, சில வகை பட்டாசுகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டன.
பசுமை பட்டாசை 'நீரி' வடிவமைத்திருந்தாலும்,, அதை தயாரிப்பது இந்திய பட்டாசு உற்பத்தியாளர்களாகவே இருப்பார்கள். அந்த நிலையில் பசுமை பட்டாசு தயாரிப்பதற்காக பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும்.
உலகில் எந்த நாடுகளில் பசுமை பட்டாசு வெடிக்கப்படுகிறது?
இந்திய உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் அறிவுறுத்தல்களின்படி, பசுமை பட்டாசுகள் வெடிக்கும் வழக்கம் உலகில் எந்தவொரு நாட்டிலுமே இல்லை.
பசுமை பட்டாசு என்ற கருத்தாக்கமே இந்தியாவுடையது என்கிறார் டாக்டர் சாதனா. இந்த வகை பட்டாசுகளை இந்தியா பயன்படுத்தத் தொடங்கினால், நம் நாடு உலகிற்கே முன்மாதிரி நாடாக திகழும் என்கிறார் அவர்.
'நீரி'யின் ஆராய்ச்சிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது அது அரசுத் துறைகளின் பரிசீலனையில் உள்ளது. "பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனமான 'பெஸோ'வின் (PESO) அனுமதி கிடைத்த பிறகு பசுமை பட்டாசுகள் சந்தைப்படுத்தப்படும்" என்கிறார் டாக்டர் சாதனா.


whats app group1


whats app group 2