தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை மாற்றி அமைக்கும்
வகையில் தற்போது அரசு ஆரம்பப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஆங்கில வழியில் மழலையர் வகுப்புகள் தொடங்க ஆயத்த பணிகள் நடக்கிறது. இதற்காக புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழகத்தில் தற்போது 3 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கன்வாடிப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 1 லட்சம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தொடங்க உள்ள மழலையர் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தற்போது அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் மட்டும் சுமார் 52 ஆயிரம் குழந்தைகள் மழலையர் வகுப்பில் படித்து வருகின்றனர்.
மழலையர் பாடத்திட்டம் கடந்த வாரம் தமிழக அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள், கல்வியாளர்கள் வரும் 30ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுவரை சுமார் 1000 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், நவம்பர் முதல் வாரம் வரை தேதியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் நீட்டித்துள்ளது. நவம்பர் 2வது வாரம் கருத்துகள் மீது ஆய்வு நடத்தப்பட்டு நவம்பர் 3வது வாரத்தில் பாடத்திட்டம் குறித்து இறுதி செய்யப்படும்.i